காயத்துடன் இறந்து கிடந்த மான் துப்பாக்கியால் சுடப்பட்டதா? வனத்துறையினர் விசாரணை


காயத்துடன் இறந்து கிடந்த மான் துப்பாக்கியால் சுடப்பட்டதா? வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

கொளகம்பட்டி அருகே காயத்துடன் இறந்து கிடந்த மான் துப்பாக்கியால் சுடப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட அரூர், கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், தீர்த்தமலை வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவைகள் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் போது கிணற்றில் தவறி விழுந்தும், வாகனங்களில் சிக்கியும் இறந்து வருகின்றன. மேலும் மர்ம நபர்கள் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கொளகம்பட்டி- எச்.தொட்டம்பட்டி சாலையில் தீரன் சின்னமலைபுரம் பகுதியில் காயங்களுடன் பெண் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் கிருஷ்ணன், வனவர் வேடியப்பன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த மானை மீட்டனர். அந்த மானுக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் இருந்தது.

இதையடுத்து இறந்த மானை அரூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே குழிதோண்டி அடக்கம் செய்தனர். கொளகம்பட்டி வனப்பகுதியில் வேட்டை கும்பல் மானை துப்பாக்கியால் சுட்டத்தில் காயத்துடன் தப்பி வந்து சாலையோரம் விழுந்து இறந்ததா? அல்லது சாலையை கடந்த போது வாகனத்தில் சிக்கி மான் இறந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story