அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தந்தை மனு
காஞ்சீபுரத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பள்ளி மாணவி சரிகா உயிரிழந்தார். இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மாணவியின் தந்தை மனு கொடுத்து உள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர் ஆனந்தன் மகள் சரிகா (வயது 14). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். 2 சிறுநீரகமும் செயல் இழந்த சரிகா, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10–ந்தேதி உடல் நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் பலமணி நேரம் கழித்து வந்தது. ஆம்புலன்சில் செல்லும் வழியில் சரிகா உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சரிகாவின் தந்தை ஆனந்தன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:–
எனது மகள் சரிகா இறப்பிற்கு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 10–ந்தேதி அன்று பகல் 12 மணி முதல் 7 மணி வரை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரிவில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோரின் அலட்சிய போக்கே காரணமாகும்.
எனவே எனது மகள் இறப்பிற்கு காரணமான மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.