நந்திபேவூர் கிராமத்தில் சம்பவம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மர்ம உறுப்பில் தீவைத்த தொழிலாளி


நந்திபேவூர் கிராமத்தில் சம்பவம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மர்ம உறுப்பில் தீவைத்த தொழிலாளி
x
தினத்தந்தி 19 Dec 2017 8:30 PM GMT (Updated: 19 Dec 2017 8:14 PM GMT)

நந்திபேவூர் கிராமத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மர்ம உறுப்பில் தீவைத்துவிட்டு தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்கமகளூரு,

நந்திபேவூர் கிராமத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மர்ம உறுப்பில் தீவைத்துவிட்டு தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தொழிலாளி

தாவணகெரே மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா நந்திபேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பா நாயக்(வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி பாய்(26). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 5 வயதில் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

லட்சுமி பாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை திப்பா நாயக் அடித்து, உதைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் அடங்காத அவர், தனது மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொல்ல முயன்றதாகவும் தெரிகிறது. அப்போது அங்கிருந்த அவர்களுடைய உறவினர்கள் லட்சுமி பாயை காப்பாற்றினர். இதனால் மனமுடைந்த லட்சுமி பாய் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நடத்தையில் சந்தேகம்

அங்கிருந்தபடி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு தாவணகெரே கோர்ட்டில் லட்சுமி பாய் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் லட்சுமி பாயை, திப்பா நாயக் சந்தித்தார். அப்போது தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இனிமேல் இதுபோல் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தாராம். மேலும் தன்னுடன் சேர்ந்து வாழும்படியும் கேட்டுக் கொண்டாராம்.

அதில் மனம் இறங்கிய லட்சுமி பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் நந்திபேவூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

மர்ம உறுப்பில் தீவைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் லட்சுமி பாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு திப்பா நாயக் தகராறில் ஈடுபட்டார். இதனால் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திப்பா நாயக் தனது மனைவியை அடித்து, உதைத்தார்.

இதில் லட்சுமி பாய் மயங்கி விழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து லட்சுமி பாயின் மர்ம உறுப்பில் ஊற்றி தீவைத்துவிட்டு திப்பா நாயக் தப்பி ஓடிவிட்டார். இதனால் லட்சுமி பாய் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

பரபரப்பு

அவரது அலறல் சத்தத்தைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் லட்சுமி பாயை மீட்டு சிகிச்சைக்காக அரப்பனஹள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து அரப்பனஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள திப்பா நாயக்கை வலைவீசி தேடிவருகிறார்கள்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மர்ம உறுப்பில் கணவனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story