திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் மூழ்கிய கார் டிரைவர் பிணமாக மீட்பு; உறவினர்கள் சாலை மறியல்


திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் மூழ்கிய கார் டிரைவர் பிணமாக மீட்பு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Dec 2017 9:45 PM GMT (Updated: 19 Dec 2017 8:28 PM GMT)

ஏரியில் மூழ்கி பலியான கார் டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அவரை விரைவாக மீட்க கோரி உறவினர்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் பிரபாகரன் (வயது 24), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றார்.

அப்போது அங்கு ஏரியில் இறங்கி பிரபாகரன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கிவிட்டார். அவர் என்ன ஆனார் என்பது பற்றி தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய பிரபாகரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வெகு நேரமானதால் மீட்பு பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி முதல் தீயணைப்பு துறையினர், இருவேல்பட்டு ஏரிக்கு வந்து பிரபாகரனை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் என்ன நேர்ந்தது என்றும் தெரியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இருவேல்பட்டில் காலை 10.45 மணியளவில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரபாகரனை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் விழுப்புரம்– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே காலை 11.05 மணியளவில் பிரபாகரனை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரபாகரனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் பிரபாகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story