கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை துறைமுகம் வெறிச்சோடியது


கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை துறைமுகம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 19 Dec 2017 10:00 PM GMT (Updated: 19 Dec 2017 8:40 PM GMT)

கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100–க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் தினமும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

‘ஒகி’ புயலின்போது கடல் சீற்றத்துடன் இருந்ததால் அந்த சமயத்தில் ஒரு வாரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதன்பிறகு கடல் சீற்றம் குறைந்ததும், மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடலூர் துறைமுகத்துக்கு மீன்களின் வரத்து அதிகரித்தது. அவ்வாறு வந்த மீன்களை உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச்சென்றனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் ஒரு சில மீனவர்களை தவிர பெரும்பாலானோர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்ததை காணமுடிந்தது.

இதனால் கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story