தீயில் கருகி 12 தொழிலாளர்கள் சாவு நொறுக்குதீனி கடை உரிமையாளர் கைது
தீயில் கருகி 12 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் நொறுக்குதீனி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
தீயில் கருகி 12 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் நொறுக்குதீனி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
பயங்கர தீ விபத்துமும்பை அந்தேரி கிழக்கு சாக்கிநாக்கா கைரானி சாலையில் உள்ள பானு பர்சான் என்ற நொறுக்குதீனி தயார் செய்து விற்பனை செய்யும் கடையில் நேற்றுமுன்தினம் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 12 பேர் உடல் கருகி பலியானார்கள்.
அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி போயிருந்த அவர்களது உடல்கள் வெகுநேரத்திற்கு பிறகு அடையாளம் காணப்பட்டன.
கடை உரிமையாளர் கைதுமும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த தீ விபத்து குறித்து சாக்கிநாக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கடை மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கடையின் உரிமையாளர் ரமேஷ் பன்சாலியை அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் ரமேஷ் பன்சாலியை நேற்று அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.