வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம்: ஆய்வு வந்த அதிகாரிகளை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி அருகே வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை எதிர்த்து மீனவர்கள் போராட்டம். கடலில் அலையை சர்வே எடுத்த படகும் சிறைபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் இனையம் கடல் பகுதியில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இனையத்தில் துறைமுகம் அமைப்பதற்காக பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வுப்பணிகளும் நடந்தன.
இதற்கு குமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த துறைமுகம் அமைந்தால் மீன்வளம் பாதிப்பதுடன் தங்களது வாழ்வாதாரமும் பாதுக்கப்படும் என்று பல்வேறு விதமான போராட்டங்களையும் நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் இனையம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கு பதில் மாற்று இடத்தில் துறைமுகம் அமைக்க ஆலோசனை நடப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப கன்னியாகுமரிக்கும் கீழ மணக்குடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் துறைமுகம் அமையலாம் என தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் மத்திய அரசு அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினர் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் தெட்சணத்து துவாரகாபதி கடற்கரை பகுதிக்கு ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் அங்கு தெட்சணத்து துவாரகாபதியின் தென்பகுதியில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்றனர்.
பின்னர், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களுடன் பூஜை நடத்துவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கோவளம் கடற்கரை மீனவ கிராமக்களிடம் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவ மக்கள் சுமார் 500 பேர் ஆண்களும் பெண்களுமாக அங்கு திரண்டு வந்தனர். மக்கள் திரண்டு வருவதை கண்ட அங்கு இருந்த போலீசார் அதிகாரிகளை பாதுகாப்புடன் காரில் அனுப்பி வைத்தனர்.
மேலும், கீழ மணக்குடி மற்றும் மேல மணக்குடி கிராமத்தை சேர்ந்த மீனவமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்த கடற்கரை பகுதிக்கு சென்று துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் கோவளம் பங்கு தந்தை பிரபுதாஸ், மேல மணக்குடி பங்குத்தந்தை கில்டஸ் ஆகியோர் தலைமையில் திரளான மீனவ மக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேனுகோபால், இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இதற்கிடையில் கோவளம் கடல் பகுதியில் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. இதைக்கண்ட மீனவர்கள் அந்த படகு வர்த்தக சரக்கு பெட்டக துறைமுக சர்வே பணிக்கு வந்த படகாக இருக்குமோ என்று சந்தேகம் மீனவர்கள் இடையே ஏற்பட்டது.
உடனே 10–க்கும் மேற்பட்ட வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டு சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர். அப்போது, அந்த படகில் 4 பேர் இருந்தனர். அவர்கள் கோவளம் கடல் பகுதியில் அலைகளை சர்வே எடுப்பதற்கான பணிக்கு வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து சர்வே பணிக்கு பயன்படுத்திய கருவிகளுடன் 4 பேரையும் ஒரு வள்ளத்தில் கரைக்கு அழைத்து வந்தனர்.பின்னர், அவர்களை கோவளத்தில் உள்ள தூய இஞ்ஞாசியார் ஆலயத்தில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் வைத்து சிறைபிடித்து வைத்தனர்.
இதற்கிடையே கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இயங்கி வரும் தமிழ்நாடு கடல்சார் வாரிய கண்காணிப்பாளர் மாரிசெல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பங்குத்தந்தையிடம் எங்களின் அனுமதி பெற்ற பின்புதான் கோவளம் கடல்பகுதியில் சர்வே பணிக்கு வந்தார்கள் என்று கூறினார்.
மேலும், இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடித்திருந்த 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், சர்வே பணியில் இருந்த படகையும் கோவளம் கடற்கரைக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர்.