கட்டிட மேஸ்திரி கொலைக்கு காரணம் என்ன? கைதான 5 பேரிடம் விசாரணை


கட்டிட மேஸ்திரி கொலைக்கு காரணம் என்ன? கைதான 5 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தொரப்பாடியில் கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர்,

வேலூர் தொரப்பாடி மேட்டுப்பாறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சர்மிளா. கடந்த 18-ந் தேதி இரவு கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீடு புகுந்த மர்மகும்பல் ஒன்று கோபியை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை தொடர்பாக சர்மிளா, கோபியின் உறவினர்கள், கோபியுடன் பணிபுரியும் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோபி வேறு சமூகத்தை சேர்ந்த சர்மிளாவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணம் சர்மிளாவின் தம்பி ரஞ்சித்துக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கோபி அடிக்கடி சர்மிளா வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார். அதன் காரணமாக கோபிக்கு, தனது வீட்டின் அருகேயுள்ள காலிமனையை சர்மிளா பெயரில் அவரது தாயார் எழுதி கொடுத்துள்ளார்.

காலிமனையில் தற்போது கோபி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. தனது அக்காவை காதல் திருமணம் செய்ததால் கோபத்தில் இருந்த ரஞ்சித்துக்கு தனது வீட்டின் அருகில் புதிதாக கோபி வீடு கட்டி வருவது மேலும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீடு கட்டுவது தொடர்பாக கோபிக்கும், ரஞ்சித்துக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மேலும் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கோபியை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கியிருந்த திருவெற்றியூரை சேர்ந்த காஜா மொய்தீன் (28), தண்டையார்பேட்டை மதன்குமார் (27), முகமதுபாபு (23), மணலியை சேர்ந்த டேனியல் (22), வேலூர் தொரப்பாடியை சேர்ந்த ரகமதுல்லா (26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கோபியின் மைத்துனர் ரஞ்சித் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் சென்னை, காஞ்சீபுரம் பகுதியில் தேடி வருகிறார்கள்.

ரஞ்சித் செம்மரம் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்றும், அவர் கைது செய்யப்பட்டால் கொலைக்கு முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story