2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ராசா விடுதலை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ராசா விடுதலை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ராசா விடுதலை செய்யப்பட்டதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அய்யம்பேட்டை,

2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து அய்யம்பேட்டையில் நகர தி.மு.க. சார்பில் மாவட்ட பிரதிநிதி டி.பி.ஆர்.மனோகரன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் திரளான தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதேபோல கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோவில் அருகே தி.மு.க. நகர செயலாளர் சு.ப.தமிழழகன் தலைமையில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரா.அசோக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கணேசன் உள்ளிட்ட திரளான தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஒரத்தநாட்டில் தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து பாப்பாநாடு, திருவோணம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளிலும் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கபிஸ்தலம் பாலக்கரை மற்றும் பாபநாசம் கடைவீதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை பெரியார் சிலை அருகில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து தி.மு.க.வினர் கொண்டாடினர். இதில் நகர பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராவூரணியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் பேரணியாக சென்று அண்ணா–பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


Next Story