மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை பெற்று தரவேண்டும்


மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை பெற்று தரவேண்டும்
x
தினத்தந்தி 22 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-23T00:22:24+05:30)

காவிரியின் கடைமடை பகுதியில் பயிர் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை பெற்று தரவேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நாட்ராயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருபாகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆட்சியர் மணிமேகலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை சம்பந்தமான குறைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

மாதவன்(கடலூர்):- சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். மங்களூர், நல்லூர் பகுதியில் மானாவாரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.370 கோடி நிலுவைத்தொகை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெய்வநாயகம்(அண்ணாகிராமம்):- மேல்குமாரமங்கலத்தில் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி செய்து தர வேண்டும். இங்கு சேதமடைந்த மதகை சீரமைத்துத்தர வேண்டும்.

ராமலிங்கம்(குறிஞ்சிப்பாடி):- குறிஞ்சிப்பாடி வடக்கு தாழவாய்க்கால் பகுதியில் பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் வித்துகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.

ரவீந்திரன்(பரங்கிப்பேட்டை):- ரூ.40 கோடியில் வீராணம் ஏரியை தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெறாததால் ஏரியில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் பயிர் சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உப்புநீர் உள்ளே புகுந்ததால் 20 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா பகுதிகளில் எலி தொல்லையை கட்டுப்படுத்த முகாம் நடத்த வேண்டும்.

வேல்முருகன்(புவனகிரி):- புவனகிரியில் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். குண்டும், குழியுமாக காணப்படும், சேத்தியாத்தோப்பு-வடலூர், சேத்தியாத்தோப்பு- கம்மாபுரம் சாலைகளை சீரமைத்து தரவேண்டும்.

குஞ்சிதபாதம்(பேரூர்):- பெலாந்துறை அணைக்கட்டு கிளை வாய்க்கால்களை சுற்றி 31 ஏரிகள் உள்ளன. இங்குள்ள வாய்க்கால்களையும், ஏரிகளையும் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணைகளும் அமைக்க வேண்டும். பேரூர் பகுதியில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடேசன்(கம்மாபுரம்):- திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் ஏரிக் கரையை பலப்படுத்த கடந்த 15 ஆண்டுகளில் ரூ.120 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் கரை சேதம் அடைந்துவிட்டது.

மணிகண்டன்(மங்களூர்):- இந்த ஆண்டு மங்களூர் பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட விலை குறைவாக இருப்பதால் நல்ல விலை கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறவாழி(கடலூர்):- நடுவீரப்பட்டு பழைய ஏரியை சுற்றி 200 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. ஏரியில் இருந்து கீழே இறங்குவதற்கு உரிய பாதை வசதி செய்து தரவேண்டும். பரிசமங்கலம் பாலத்தில் இருந்து விலங்கல்பட்டு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

குமரகுரு(குறிஞ்சிப்பாடி):- குறிஞ்சிப்பாடி பகுதியில் 100 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா சேதம் அடைந்துள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குள்ளஞ்சாவடியில் இருந்து நெய்வேலி செல்லும்பாதையில் உள்ள அம்பலவாணன் பேட்டை குளத்தை தூர்வார வேண்டும். கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் 100 ஹெக்டேர் பரப்பளவில் பன்னீர்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை கூட்டுறவுத்துறை கொள்முதல் செய்வதற்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அந்தந்த துறை அதிகாரிகள், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பதில் அளித்து பேசினர்.

Next Story