தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,279 கோடியில் வளர்ச்சி பணிகள்


தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,279 கோடியில் வளர்ச்சி பணிகள்
x
தினத்தந்தி 22 Dec 2017 9:00 PM GMT (Updated: 2017-12-23T00:46:47+05:30)

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,279 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,279 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஸ்மார்ட் சிட்டி

மத்திய அரசு கூட்டுறவு விவகாரங்கள் அமைச்சகம், தூத்துக்குடி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனமாக நேற்று முன்தினம் பதிவு செய்து உள்ளது. மத்திய அரசு இந்தியாவில் உள்ள 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டி தொலைநோக்கு திட்டத்தை அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள 12 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்த நிர்வாக அனுமதியை வழங்கி உள்ளது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,279.61 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் நகர பகுதி சார்ந்த வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மின்சேமிப்பு தெருவிளக்குகள், குடிசைப்பகுதிகளில் புனரமைப்பு செய்தல், உறுதியான தகவல் தொடர்பு மற்றும் பொதுவான கட்டுப்பாட்டு அறை அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பு பேணுதல், மோட்டார் வாகனம் இல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல் மற்றும் பாதசாரிகளுக்கு ஏதுவான நடைபாதை அமைத்தல், கழிவுநீர் பாதுகாப்பான முறையில் அகற்ற பாதாள சாக்கடை திட்டம் முழு அளவில் நிறைவேற்றுதல், மாநகராட்சி பள்ளிகளை சிறப்பான தொழில்நுட்பத்துடன் மிடுக்கான பள்ளிகளாக மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் எளிதில் வடிய மழைநீர் வடிகால் அமைத்தல், சிறப்பு வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல், 1–வது, 2–வது மற்றும் 3–வது குடிநீர் திட்ட பம்பிங் குழாய்கள் சீரமைத்தல் மற்றும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி குடிநீர் வினியோகம் கண்காணித்தல் ஆகிய திட்டங்கள் 2017–2022–ம் ஆண்டில் செயல்படுத்த அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

குழு அமைப்பு

இந்த திட்டங்களை செயல்படுத்த சென்னை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குனர் தலைமையில் 9 இயக்குனர்கள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம், இந்த குழு இயக்குனர்களின் கூட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்.

தற்போது முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலைகள் அமைக்க தொழில்நுட்ப வல்லுனர்களால் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.


Next Story