கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை


கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 1 Jan 2018 4:45 AM IST (Updated: 1 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை நடத்தினார். தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சித்தராமையா உள்பட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலுக்கு 4 மாதங்கள் இருக்கும்போதே கர்நாடக சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பெங்களூரு வந்தார். அமித்ஷாவுக்கு பா.ஜனதா தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து எலகங்காவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.

இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக கட்சியை பலப்படுத்த வேண்டும், கட்சியில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும், தேர்தல் நேரத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியானால் அது கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை உண்டாக்கும், எனவே அனைவரும் கருத்து வேற்றுமைகளை மறந்து பணியாற்ற வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

மகதாயி பிரச்சினையில் பா.ஜனதா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறித்தும், அதனால் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித்ஷா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்றும், இதில் யாரும் அலட்சியமாக செயல்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கர்நாடக பா.ஜனதாவில் கருத்துவேறுபாடுகள் எழுவதாகவும், இதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரித்த அமித்ஷா, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களில் வெற்றி பெற்றது போல் கர்நாடகத்தில் நமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் கூறினார்.

எடியூரப்பா மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கான பயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அமித்ஷாவிடம் எடியூரப்பா கூறினார். இதை இன்னும் சிறப்பான முறையில் நடத்தும்படி அமித்ஷா கட்டளையிட்டார். மேலும் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமரிடம் பேசி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா கூறியதாக சொல்லப்படுகிறது. 

Next Story