கமலா மில் தீ விபத்து; வெளிநாடு வாழ் இந்தியர் உயிருக்கு போராட்டம்
கமலா மில் தீ விபத்தில் காயம் அடைந்த 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெளிநாடு வாழ் இந்தியர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
மும்பை,
மும்பை கமலா மில் வளாகத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண் உள்பட 14 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
தீக்காயம் அடைந்தவர்கள் கே.இ.எம்., பாட்டியா மருத்துவமனைகள் மற்றும் ஐரோலியில் உள்ள தேசிய தீக்காய புண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 14 பேரில் 3 பேர் லேசான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்து அவர்கள் மூன்று பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வீடு திரும்பினார்கள்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மற்ற 11 பேரில், இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.