முன்விரோதம் காரணமாக நண்பரை குத்திக் கொலை செய்த வாலிபர் கைது
முன்விரோதம் காரணமாக நண்பரை குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப் பகுதியில் உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 18). சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த இவர் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் படிப்பை நிறுத்தினார். பின்பு வில்லிவாக்கம் எம்.டி.எச் ரோட்டில் உள்ள காலணி தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடி விட்டு இரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்தார். நேற்று காலை 7 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பர் சூர்யா(20) என்பவர் பிரகாஷின் வீட்டுக்கு வந்தார்.
அதே பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு அருகில் முட்புதர் பகுதிக்கு சென்று மது குடிக்கலாம் என கூறிக் கூறி அவரை அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து இருவரும் மது அருந்தினார்கள்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பிரகாஷின் கழுத்து, மார்பு, கை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச்சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ஐ.சி.எப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கக்கன் ஜி நகர் பகுதியில் பதுங்கி இருந்த சூர்யாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் சூர்யா கூறுகையில், ‘10 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் என்னை தாக்கினார். இதனால் அவமானம் அடைந்த நான் அதற்கு பலி வாங்குவதற்காக இன்று(அதாவது நேற்று) காலை மது குடிக்கலாம் என அழைத்து வந்து பிரகாஷை கொலை செய்தேன்’ என்றார்.
கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கு ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.