பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 57 பவுன் நகைகள்-பணம் கொள்ளை


பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 57 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 1 Jan 2018 11:00 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

வள்ளியூரில், பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 57 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 45). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சங்கீதாவின் தாயார் சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக ராஜ்குமார், தனது குடும்பத்தினருடன் கடந்த 29-ந் தேதி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று காலை அனைவரும் சென்னையில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு சென்றதும், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள், அறைக்குள் இருக்கும் பீரோவை பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பீரோவில் இருந்த நெக்லஸ், சங்கிலி, கம்மல் உள்பட மொத்தம் 57 பவுன் தங்க நகைகளையும் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சஜூ, எபின், சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் நெல்லையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘டைகர்‘ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்து ஓடி, மெயின் ரோட்டுக்கு சென்றது. அங்கிருந்து சிறிது தூரம் ஓடி, அங்குள்ள கோவில் அருகே நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

மேலும் நெல்லையில் இருந்து தடயவியல் நிபுணர் அகஸ்டா தலைமையிலான விரல்ரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அங்கு மர்ம மனிதர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்களா என்றும், அங்கு பதிந்து இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

ராஜ்குமார் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருப்பதை நன்கு தெரிந்தவர்கள் தான், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையடித்துச் சென்ற நகைகளின் மதிப்பு ரூ.11½ லட்சமாகும்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

பால் வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story