புத்தாண்டு தினத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு ரொக்கப் பரிசு


புத்தாண்டு தினத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு ரொக்கப் பரிசு
x
தினத்தந்தி 2 Jan 2018 4:06 AM IST (Updated: 2 Jan 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தனது குழந்தையை ஐ.ஏ.எஸ். படிக்க வைப்பேன் என அந்த குழந்தையின் தாய் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் முதலாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு மட்டும் மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மேயர் சம்பத்ராஜ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அதன்படி, புத்தாண்டு தினமான நேற்று பெங்களூரு ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிள் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் கோபி–புஷ்பா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நள்ளிரவு 12.05–க்கு பிறந்திருந்தது.

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த முதல் பெண் குழந்தை, அதுவாகும். இதையடுத்து, நேற்று காலையில் பாஷியம் சர்க்கிளில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் சென்றார். பின்னர் அவர், பெண் குழந்தையை பெற்றெடுத்த புஷ்பாவுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு மாநகராட்சி சார்பில் முதல் முறையாக, அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ரூ.5 லட்சம் பரிசு, அந்த குழந்தையின் கல்வி செலவுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அந்த தொகையை வங்கியில் செலுத்தி, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை குழந்தையின் படிப்பு செலவுக்கு பெற்றோர் பயன்படுத்தலாம். மேற்படிப்புக்கும் அந்த தொகை உதவியாக இருக்கும்,“ என்றார்.

இதுபற்றி குழந்தையின் தாய் புஷ்பா கூறும்போது, ‘நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவள். எனது குழந்தை மிகுந்த அதிர்ஷ்டசாலி ஆவாள். அவள் பிறந்ததும் ரூ.5 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ.5 லட்சத்தை, எனது குழந்தையின் படிப்புக்காக மட்டுமே செலவு செய்வேன். அந்த பணத்தை வேறு எதற்காகவும் பயன்படுத்த போவதில்லை. எனது குழந்தையை ஐ.ஏ.எஸ். படிக்க வைப்பேன். அதுதான் எனது ஆசை ஆகும். அவள் ஐ.ஏ.எஸ். படிக்க இந்த பணம் பயன் உள்ளதாக இருக்கும்‘ என்று கூறினார்.



Next Story