என்ஜினீயரிங் மாணவர் மயங்கி விழுந்து சாவு காரணம் என்ன? போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் என்ஜினீயரிங் மாணவர் மயங்கி விழுந்து சாவு காரணம் என்ன? போலீஸ் விசாரணை
நாகர்கோவில்,
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் வெள்ளாளர் கோவில் தெருவை சேர்ந்தவர் தாணுமூர்த்தி. இவருடைய மகன் ராஜா (வயது 18). இவர், கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு வெகு நாட்களாக உடல்நலக்குறைவு இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பின், ராஜா சோர்வாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து பாத்ரூம் சென்ற அவர், திரும்பி வந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடசேரி போலீசில் தாணுமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா எப்படி இறந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.