புதிய மருத்துவ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு–தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
மத்திய அரசு தாக்கல் செய்த தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் அரசு–தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய மருத்துவ மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்ட இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் சங்க சிவகங்கை கிளை செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்குடியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை மாநில செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருப்புவனம், திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அவரச சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்கப்பட்டது.