சென்னைக்கு கடத்திவந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி கொண்டுவருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வெளிநாட்டு விமானங்களில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ் (வயது 28) என்பவர் வந்தார். கோழிக்கோட்டுக்கு நேரடி விமானம் இருந்தும், அவர் அதில் செல்லாமல் சென்னைக்கு வந்ததால் சந்தேகம் அடைந்தனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் பாப்கான் தயாரிக்கும் கருவி மற்றும் சி.டி. பிளேயர் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதனுள் ஆங்கில ‘இ’ வடிவில் 27 தகடுகளும், ‘ஓ’ வடிவில் 9 தகடுகளும் வெள்ளி முலாம் பூசப்பட்டு இருந்தது.
அவற்றை பரிசோதனை செய்தபோது அவை தங்க தகடுகள் என தெரியவந்தது. ரூ.23 லட்சம் மதிப்புள்ள 782 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். கேரள வாலிபர் நவாசையும் கைது செய்தனர். அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார் என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.