கோவில்பட்டி பகுதியில் உள்ள தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு


கோவில்பட்டி பகுதியில் உள்ள தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 3 Jan 2018 4:15 AM IST (Updated: 3 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பகுதியில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மின் இணைப்பு வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று மின் வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தேசிய தீக்குச்சி தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக உள்ளேன். எங்கள் பகுதியில் ஏராளமான தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 2 லட்சம் பேர் தினக்கூலிகளாக தீக்குச்சி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 2 லட்சம் தினக்கூலிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. திடீரென மின் இணைப்பை துண்டிக்க காரணம் என்ன என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டோம்.

அதற்கு அவர்கள், தீக்குச்சி தயாரிக்க வனத்துறையிடம் தங்களது தொழிற்சாலைகள் முறையான லைசென்சு பெறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின்இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி வனத்துறையிடம் இருந்து உத்தரவு கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வனத்துறையிடம் லைசென்சு பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் எங்களது தொழிற்சாலைகளை நடத்தி வருகிறோம். எனவே எங்களது தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், “மனுதாரர்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story