காஷ்மீரில் பனிப்பொழிவில் இறந்த கோவில்பட்டி ராணுவவீரரின் உடல் தகனம்
காஷ்மீரில் பனிப்பொழிவில் இறந்த கோவில்பட்டி ராணுவவீரரின் உடல் நேற்று சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே சின்னமலைக்குன்று பஞ்சாயத்து சாத்தூரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜேஷ் கண்ணன் (வயது 33). இவர், கடந்த 14 ஆண்டுகளாக ராணுவவீரராக பணியாற்றி வந்தார். கடந்த 29–ந்தேதி காஷ்மீரில் பணியில் இருந்தபோது, கடும் பனிப்பொழிவு காரணமாக இவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடலை ஸ்ரீநகர் மற்றும் புதுடெல்லிக்கு எடுத்து சென்று, ராணுவ வீரர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அங்கிருந்து அவரது உடலை விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவில் கொண்டு வந்தனர். அங்கிருந்து அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி, சொந்த ஊரான சாத்தூரப்பநாயக்கன்பட்டிக்கு நேற்று காலை 7 மணி அளவில் கொண்டு வந்தனர். வீட்டில் அவரது உடலை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைத்தனர்.
ராணுவவீரர் ராஜேஷ் கண்ணனின் உடலுக்கு விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராஜசேகர், எட்டயபுரம் தாசில்தார் சூர்யகலா, வருவாய் ஆய்வாளர் மகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கீதாலட்சுமி,
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் கேசவராஜ், செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் நாகராஜன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவருடைய உடலை ராணுவ வீரர்கள், ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்து சென்றனர். மயானத்தில் அவருடைய உடலுக்கு ராணுவ லெப்டினன்ட் கர்னலும், மாவட்ட என்.சி.சி. அதிகாரியுமான வெற்றிவேல் தலைமையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த 15 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு, வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அவருடைய உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடி மற்றும் அவரது உடமைகளை மனைவி ஆனந்தலட்சுமியிடம் (27) ஒப்படைத்தனர். பின்னர் அவருடைய உடலுக்கு மனைவி மற்றும் மகள் அரி மோசிகா (1½) ஆகியோர் தீ மூட்டினர். பின்னர் ராணுவ மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.