நெல்லை பழக்கடை அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை: தம்பதி உள்பட 3 பேர் கைது ரூ.20 லட்சம் நகைகள் மீட்பு


நெல்லை பழக்கடை அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை: தம்பதி உள்பட 3 பேர் கைது  ரூ.20 லட்சம் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 4 Jan 2018 3:00 AM IST (Updated: 4 Jan 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பழக்கடை அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை பழக்கடை அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டன.

பழக்கடை அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெரிய தட்டாக்குடி தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. பழக்கடை அதிபர். இவருடைய மகன் தங்கத்துரை. இவர் நெல்லையில் உள்ள பழக்கடைகளை கவனித்து வருகிறார். இவருடையை மனைவி காந்திமதி(வயது 35).

இவர், கடந்த டிசம்பர் மாதம் 12–ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம மனிதர்கள், காந்திமதியை அரிவாளால் வெட்டினர். பின்னர் அவருடைய வாயில் துணியை அமுக்கி பீரோக்களில் இருந்த 136 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

4 தனிப்படைகள்

இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர்(பொறுப்பு) கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில் உதவி போலீஸ் கமி‌ஷனர் மெட்லரின் எஸ்கால் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையில் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், சேக் அப்துல்காதர், காசிப்பாண்டியன், விஜய் கோல்டன்சிங் மற்றும் ஏட்டுக்கள் இடம் பெற்று இருந்தனர்.

உறவினர்களே கைவரிசை

தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீட்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 கேமிராக்களில் பழக்கடை அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம மனிதர்கள் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பழக்கடை அதிபர் செல்லப்பாவின் உறவினர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார், நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்த மணிக்கண்ட பூபதி(22). வீரகேரளம்புதூர் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த சுதர்சன்(வயது 20), பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்த விக்னேஷ்(20) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள், அரிவாள், கத்தி, செல்போன்கள் ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன.

தம்பதி உள்பட 3 பேர் கைது

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த சண்முகவேல் மகன் அழகுநயினார்(வயது 24), பாளையங்கோட்டை அருகே உள்ள மேலச்செவலை சேர்ந்த பிச்சையா மகள் லட்சுமணகாந்தன் ஆகியோர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அழகுநயினார், காந்திமதியின் அக்காள் மகள் சுபிக்ஷாவை திருமணம் செய்து கொண்டவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரி யவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னை, கோவை, மும்பை ஆகிய இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அழகுநயினார், லட்சுமணகாந்தன் ஆகியோர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று அதிகாலை பிடித்தனர். தொடர்ந்து அழகுநயினார் மனைவி சுபிக்ஷாவையும் கைது செய்தனர்.

ரூ.20 லட்சம் நகைகள் மீட்பு

கைதானவர்களிடம் இருந்து 101 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

கொள்ளையர்களை கண்டு பிடித்தது எப்படி?
போலீஸ் துணை கமி‌ஷனர் விளக்கம்

பழக்கடை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை கண்டு பிடித்தது எப்படி? என்பது குறித்து போலீஸ் துணை கமி‌ஷனர் விளக்கம் அளித்தார்.

இது குறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:–

காட்டி கொடுத்த செல்போன் பேச்சுக்கள்

நெல்லை பழக்கடை அதிபர் செல்லப்பா வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தினோம். இது தவிர செல்லப்பாவின் குடும்பத்தினர் பயன்படுத்திய செல்போன்களை வைத்து அவர்கள் யார்? யாருடன் பேசி உள்ளனர்? என்பது குறித்தும் விசாரணை நடத்தினோம். அதன் மூலம் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. அவருடைய உறவினர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

காந்திமதியின் அக்காள் மகள் கணவர் அழகுநயினார், இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவர், 4 வாலிபர்களை இந்த கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார். சம்பவத்தன்று சுதர்சன், லட்சுமணகாந்தன் ஆகியோர் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்துள்ளனர். விக்னேஷ், வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளார். நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வந்தவர்கள், விக்னேசுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.

காந்திமதியின் மகள்

பின்னர் மணிகண்ட பூபதியின் காரில் ஏறி அவர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் தப்பி சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஏற்கனவே 3 பேரை கைது செய்துள்ளோம். தற்போது அழகுநயினார், அவருடைய மனைவி சுபிக்ஷா, லட்சுமணகாந்தன் ஆகியோரை கைது செய்து இருக்கிறோம். இவர்களுடன் சேர்த்து இதுவரையில் இந்த வழக்கில் 6 பேரை கைது செய்துள்ளோம்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் காந்திமதியின் 17 வயது மகளுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

குண்டர் சட்டத்தில் கைதானவர்

கைதான அழகுநயினார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர். அதேபோல் லட்சுமணகாந்தன் மீது முன்னீர்பள்ளம், பத்தமடை, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த கொள்ளையில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறோம். அவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம்.

437 வழக்குகள் பதிவு

நெல்லை மாநகர பகுதியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நெல்லை மாநகர பகுதியில் 437 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 317 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ரூ.13 கோடியே 96 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் ரூ.12 கோடியே 8 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 87 சதவீதம் மீட்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story