அரசு மருத்துவமனைகளில் போதுமான சக்கர நாற்காலிகள் உள்ளனவா? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
கீழக்கரை அருகே உள்ள 100–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைகளுக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையைத் தான் சார்ந்துள்ளனர்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, வெங்குளத்தைச் சேர்ந்த ராஜூ என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கீழக்கரை அருகே உள்ள 100–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைகளுக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையைத் தான் சார்ந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, ஆபரேசன் தியேட்டர், ஸ்கேன் மையம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து, ஏழை மக்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை. ஆனால் கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காலியாக உள்ள டாக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், அரசு மருத்துவமனைகளில் சக்கர நாற்காலிகள், ஸ்டிரெச்சர்கள் போதுமான அளவில் உள்ளனவா, பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் அவற்றை சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கை வருகிற 29–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.