போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: மதுரையில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை
போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக போராட்டம் நடத்தியதால், மதுரையில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் தனியார் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
மதுரை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலையிலேயே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர். இதனால் அரசு பஸ்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாயினர்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று 2–வது நாளாக நீடித்தது. மதுரையை பொறுத்தமட்டில், 90 சதவீத பஸ்கள் நேற்றும் இயக்கப்படவில்லை.
போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு சில தொழிற்சங்க ஊழியர்கள், பஸ்களை இயக்குவதற்காக அதிகாலை நேரத்தில் அந்தந்த பணிமனைகளுக்கு வந்தனர். அப்போது பணிமனை முன்பு திரண்டிருந்த மற்ற தொழிற்சங்க ஊழியர்கள் பஸ்களை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் உள்ள பல பணிமனைகள் காலையில் இருந்தே போர்க்களமாக காட்சி அளித்தன.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனையிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. பஸ்சை இயக்குவதற்காக வந்த ஊழியர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
இதுபோல், எல்லீஸ்நகர் பணிமனையில் இருந்து பஸ்களை வெளியே எடுக்காத வண்ணம் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிகாலை 3 மணிக்கே, பணிமனை வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின், ஒரு சில பஸ்களை மட்டும் வெளியே எடுத்துவர அனுமதி அளிக்கப்பட்டது.
அரசு பஸ்கள் ஓடாததால், பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, காம்பிளக்ஸ் பஸ் நிலையங்கள் காலியாகக் கிடந்தன.
தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளே வந்த பயணிகளை ஏற்றிச்சென்றன.
எனினும், அரசு பஸ் சேவையையே பெரும்பகுதி சார்ந்து இருக்கும் மதுரை நகரம் இந்த போராட்டத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தது. பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வந்தவர்களும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் பரிதவித்தனர். ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்தை படையெடுத்தனர். இதனால், குருவாயூர் எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர், நெல்லை–மயிலாடுதுறை பாசஞ்சர், செங்கோட்டை பாசஞ்சர் ஆகியவற்றில் கூட்டம் அலை மோதியது.
மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களுக்கு மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பொதுமக்கள் வேறு வழியின்றி அவற்றில் பயணம் செய்தனர்.
இதற்கிடையே மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பெரியாருக்கு வந்து கொண்டு இருந்த ஒரு அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. கண்ணாடிகள் குத்தியதில் டிரைவர் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்க வலியுறுத்தி, மதுரை பைபாஸ் சாலை தலைமை பணிமனை, பொன்மேனி, எல்லீஸ்நகர், புதூர் உள்ளிட்ட போக்குவரத்து பணிமனைகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், நேரில் சென்று ஆய்வு செய்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பொது மக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 16 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 1100–க்கும் மேற்பட்ட பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். போராட்டம் காரணமாக 1000–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. போராட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர்கள் மட்டுமே பஸ்களை இயக்குகிறார்கள். முன்அனுபவம் இல்லாத தனியார் நிறுவனங்களை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களை வைத்து பஸ்களை இயக்குவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
இதற்கிடையே, மதுரை ரெயில்வே கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், பழனி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா உத்தரவின் பேரில், முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் அனைத்து ரெயில்நிலையங்களிலும் கூடுதல் ஊழியர்களை நியமித்து கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்தார். இது தவிர, ரெயில்நிலையங்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளுக்கு நேரடியாக டிக்கெட் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடுகள், பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளை கண்காணிக்க கோட்ட வர்த்தக மேலாளர் பரத் நியமிக்கப்பட்டுள்ளார்.