பாதாள சாக்கடை திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார்: குடிநீர் வடிகால் வாரீய மேலாண்மை இயக்குனர் பேட்டி
சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரீய மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த இடங்களில் சரியான முறையில் பள்ளங்களை மூடாததால் அதிகளவில் விபத்துகள் நடந்த வருகிறது. மேலும் தொப்பையன் தெருவில் பாதாளசாக்கடை குழியில் சரஸ்வதி(75) என்பவர் தவறி விழுந்து பலியானார்.
இந்த நிலையில், இத்திட்டப்பணிகள் மேற்கொண்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், பணிகள் நிறைவடைந்த இடங்கில் தரமான சாலை அமைக்க கோரியும் வர்த்தகர்கள் சங்கத்தினர் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதோடு முறைகேடுகள் தொடர்பான புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரீய மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன் நேற்று சிதம்பரத்துக்கு பாதாளசாக்கடை திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்ய வந்தார். அப்போது அவர், சிதம்பரம் அருகே லால்புரம் கிராமத்தில் ரூ.75 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்த, அவர் குறித்த காலத்திற்குள் தரமான முறையில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, நிருபர்கள் குடிநீர் வடிகால் வாரீய மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரனிடம் பாதாள சாக்கடை திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பணிகள் அனைத்தும் வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்து விடும். திட்டப்பணிகள் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் தலைமையில் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
அப்போது அவருடன் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தங்க ஜெயா, மேற்பார்வை பொறியாளர்கள் பிரபாகரன், நரேந்திரன், உதவி பொறியாளர் விஜயலட்சுமி, உதவி நிர்வாக பொறியாளர் அசோகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.