அரசு பஸ் தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி


அரசு பஸ் தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 8 Jan 2018 4:45 AM IST (Updated: 8 Jan 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுமுறை நாளில் வெளியூருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

சேலம்,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடைய போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் நேற்றும் குறைந்தளவே பஸ்கள் இயக்கப்பட்டன.

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும், தாரமங்கலம், ஆத்தூர், தலைவாசல், மேட்டூர் என மாவட்டத்திற்குள் செல்லக்கூடிய பெரும்பாலான பஸ்களும் இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதற்கிடையில் தற்காலிக பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் குறைந்தளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்காலிக கண்டக்டர்கள் பஸ்நிலையத்தில் கையெழுத்திட்டு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்கின்றனர். லாரி மற்றும் கனரக வாகன டிரைவர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அரசு பஸ்களை ஓட்டுவதற்கு அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை என்று கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் மாவட்ட பொதுமக்கள் பொதுவாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்தினருடன் மேட்டூர், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கும் செல்வது வழக்கம். ஆனால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியுற்றனர். அதே நேரத்தில் சேலத்தில் டவுன் பஸ்கள் மட்டும் ஓரளவு இயக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 13 பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம் போல் தனியார் பஸ்கள் ஓடின. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் இந்த பஸ்சுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் வரை காத்திருந்தனர். இதுதவிர புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் தனியார் பஸ்களில் ஏறுவதில் பயணிகளிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மாவட்டத்தில் உள்ள கிராமபுறப்பகுதிகளுக்கு அரசு பஸ்கள் குறைவாக தான் இயக்கப்பட்டு வருவதால் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதற்கிடையில் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story