பா.ஜனதா தொண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
பா.ஜனதா தொண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
மங்களூரு,
பா.ஜனதா தொண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
பா.ஜனதா தொண்டர் கொலைகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் தீபக் ராவ் என்கிற தீபு(வயது 22). பா.ஜனதா தொண்டர். இந்த நிலையில் கடந்த 3–ந் தேதி சூரத்கல்லில் இருந்து கிருஷ்ணாபுரா நோக்கி தீபக் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் தீபக்கின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அவரை வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபக் ராவை கொலை செய்த 4 பேரை கடந்த 3–ந் தேதி இரவே போலீசார் பிடித்தனர்.
இந்த நிலையில் தீபக் ராவ் கொலை செய்யப்பட்ட தினத்தன்று இரவு மங்களூரு நகர் ஆகாஷ்பவன் பகுதியை சேர்ந்த பசீர்(30) என்பவர் ஸ்கூட்டரில் கொட்டரசவுக்கி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி சென்றது.
சாவுஇதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பசீரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பசீரை தாக்கியதாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தீபக் ராவ் கொலைக்கு பழிக்கு பழியாக பசீரை, அவர்கள் 4 பேரும் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பசீரின் உடல்நிலை மோசமானது. நேற்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
எம்.எல்.ஏ. அஞ்சலிஇதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கிருஷ்ண பாலேமார் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு வெளியே வழிமறித்த பசீரின் உறவினர்கள், நீங்கள் பசீரின் உடலை பார்க்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம் என்று அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பசீரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடலை உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து ஆகாஷ்பவனுக்கு ஆம்புலன்சில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவரின் உடலுக்கு மங்களூரு வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மொய்தீன் பாவா அஞ்சலி செலுத்தினார். மேலும் பசீரின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதலும் கூறினார். இதனை தொடர்ந்து எந்தவித பிரச்சினையும் இன்றி நேற்று மாலை பசீரின் உடல் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.