திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்,
திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் சவரிதாசன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போடி அருகே முந்தல் என்னுமிடத்தில் கேரளா நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் மளிகை பொருட்கள் இருந்தது. அதற்கு கீழ் பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் அரிசி இருந்தது. அவை ரேஷன் அரிசி என தெரியவந்தது. உடனே அந்த லாரியில் வந்தவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து லாரியில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 31) என்றும், தப்பியோடியவர் தேனியை சேர்ந்த வஜ்ரவேல் என்பது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் வாங்கி அதனை அரிசி ஆலையில் தயாரிக்கப்பட்டதை போல் 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளில் திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். தப்பியோடிய வஜ்ரவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.