பட்டப்பகலில் துணிகரம் ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை


பட்டப்பகலில் துணிகரம் ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ ஆலயத்துக்கு ஆசிரியை சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டுக்கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி அற்புதராஜ் (வயது 56). இவருடைய மனைவி மாலா ஞான பாக்கியம். இவர், பரங்குன்றாபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் வெளியூர்களில் உள்ளனர். கணவன்- மனைவி மட்டும் பங்களா சுரண்டையில் வசித்து வருகின்றனர்.

அந்தோணி அற்புதராஜ் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமைதோறும் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலையில் கணவன்- மனைவி இருவரும் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றனர்.

ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்த பிறகு இருவரும் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது.

கம்மல்கள், வளையல்கள், தங்க சங்கிலிகள், மோதிரங்கள் என பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதுதொடர்பாக சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கணவன்- மனைவி இருவரும் பகலில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டுக்கதவை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டுக்கதவு, பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை தொடர்பாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்தார்.

போலீசாரின் விசாரணையில், கதவை உடைத்து விட்டு வீட்டுக்குள் சென்ற கொள்ளையர்கள் பீரோவின் சாவியை தேடினர். அப்போது பீரோவின் மேல்பகுதியில் சாவி இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே நைசாக பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து விட்டு சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு சென்று விட்டனர்.இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story