தூத்துக்குடி– நெல்லை சாலையில் பழுதடைந்த வல்லநாடு உயர்மட்ட பாலத்தை சரிசெய்ய வேண்டும் ஜோயல் வலியுறுத்தல்


தூத்துக்குடி– நெல்லை சாலையில் பழுதடைந்த வல்லநாடு உயர்மட்ட பாலத்தை சரிசெய்ய வேண்டும் ஜோயல் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jan 2018 2:00 AM IST (Updated: 9 Jan 2018 7:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி– நெல்லை சாலையில் பழுதடைந்த நிலையில் இருக்கும் வல்லநாடு உயர்மட்ட பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி– நெல்லை சாலையில் பழுதடைந்த நிலையில் இருக்கும் வல்லநாடு உயர்மட்ட பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

உயர்மட்ட மேம்பாலம்

தொழில் நகரமான தூத்துக்குடியையும், வணிக நகரமான நெல்லையையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி– நெல்லை இடையே சுமார் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 2013–ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த இந்த நான்குவழிச்சாலையானது சரியான பராமரிப்பு இல்லாமல் பல்வேறு இடங்களில் பழுதாகி வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல இயலாத நிலையில் உள்ளது. குறிப்பாக, சுமார் ரூ.25 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் பிரதான உயர்மட்டப்பாலம் பயன்பாட்டுக்குவந்த 4 வருடங்களில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது.

சரிசெய்ய வேண்டும்

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்குவழிச்சாலையின் பிரதான உயர்மட்டப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு ஓட்டை விழுந்து இத்தனை நாட்கள் ஆகியும் சரிசெய்யப்படவில்லை. இதனை மத்திய, மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டும் காணாததுபோல இருப்பது வேதனைக்குரியது. இந்த பாலத்தில் விழுந்த ஓட்டை இதுவரை சரிசெய்யப்படாததால், வாகனங்கள் அனைத்தும் ஒருவழித்தடமாக மற்றொருபகுதிக்குரிய உயர்மட்டப்பாலம் மற்றும் நான்குவழிச்சாலையின் வழியாக திருப்பிவிடப்பட்டு ஆபத்தான வகையிலேயே வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உயர்மட்ட பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பினை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

மேலும் தூத்துக்குடி– நெல்லை நான்குவழி சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சாலைபழுதுகளையும் சரிசெய்ய வேண்டும். அதுவரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிப்பதற்கு தடை விதிக்கவேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


Next Story