தொழிலாளிக்கு ‘ஒளி கொடுத்த ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்
சாலை விபத்தில் பார்வையை இழக்க நேரிட்ட தொழிலாளிக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீண்டும் ஒளி கொடுத்தனர்.
ராயபுரம்,
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இரும்பு தூக்கும் தொழிலாளி. அவரின் வருமானத்தை நம்பி தான் குடும்பம் உள்ளது.
கடந்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி ரமேஷ் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். உடனே அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், அவருடைய வலது கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரின் கண் நரம்பு பாதிக்கப்பட்டது. மேலும் கண்ணை சுற்றியுள்ள எலும்புகள் உடைந்து இருந்தன.
எலும்புகள் உடைந்ததால் அதன் நடுவே கண் நரம்பு சிக்கி கொண்டது. இதனால் ரமேசுக்கு பார்வை திறன் குறைந்து வந்தது. இதையடுத்து கண் நரம்பை சுற்றியுள்ள எலும்புகளை விடுவிக்க, அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சையை ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் முத்து சித்ரா, டாக்டர்கள் கவுரி சங்கர், அதியமான், சரவணசெல்வன், மயக்கவியல் துறை தலைவர் குமுதா லிங்கராஜ், உதவி பேராசிரியர்கள் வாணி, லட்சுமிஸ்ரீ உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு ரமேஷ், டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரின் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவருக்கு மீண்டும் ‘ஒளி’ கிடைக்கும் என்றும் ஆஸ்பத்திரி முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் தெரிவித்தார்.