மங்களூரு– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்தது
மங்களூரு அருகே தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களூரு,
மங்களூரு–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இதைதொடர்ந்து போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதீர் குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள சூரத்கல் பகுதியில் தனியார் எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை டேங்கர் லாரியில் சமையல் கியாஸ் அடைக்கப்பட்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டினார்.மங்களூரு உப்பினங்கடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடியகல்லு பகுதியில் பெங்களூரு–மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டேங்கர் லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால் இந்த விபத்தில் அந்த டேங்கர் லாரியில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உப்பினங்கடி மற்றும் நெல்லியாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் பண்ட்வால், உப்பினங்கடி, புத்தூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டேங்கர் லாரியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீவிபத்து ஏற்படாதவாறு தடுத்தனர்.மேலும் மங்களூரு– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வழியாக பெங்களூரு செல்ல வேண்டிய வாகனங்கள் மடிகேரி, சாருமடி பகுதி வழியாக மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
விபத்து குறித்து அறிந்த தனியார் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் உள்ள கியாசை மற்றொரு டேங்கர் லாரியில் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.விபத்து காரணமாக அந்த சாலையில் இன்று(வியாழக்கிழமை) காலை 7.30 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதீர்குமார் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.