லஞ்சம் வாங்கியதாக கைதான மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் 160 பவுன் நகை, ரூ.2 லட்சம் பறிமுதல்


லஞ்சம் வாங்கியதாக கைதான மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் 160 பவுன் நகை, ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:30 AM IST (Updated: 21 Jan 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கியதாக கைதான மாநகராட்சி ஆணையாளர் வரதராஜின் சேலம் பங்களா வீட்டில் 160 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

தஞ்சாவூரில் காலிமனைக்கு குறைவாக வரி நிர்ணயம் செய்ய ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது தஞ்சை மாநகராட்சி ஆணையாளர் வரதராஜை நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சேலத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு அய்யந்திருமாளிகை சிண்டிகேட் பேங்க் காலனியில் சொந்தமாக பங்களா வீடு உள்ளது. இதனால் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டிற்குள் வரதராஜின் மனைவி சகிலா, 2 மகன்கள் ஆகியோர் இருந்தனர். விடிய, விடிய நடந்த இந்த சோதனையில், பல்வேறு சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும், 160 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சேலத்தில் உள்ள வரதராஜின் வீடு பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ், அவரது மனைவி சகிலா ஆகியோர் பெயரில் வங்கி நிரந்தர டெபாசிட் மட்டும் ரூ.1 கோடிக்கு செய்யப்பட்ட ஆவணங்கள், பல கோடி ரூபாய் மதிப்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாங்கி குவிக்கப்பட்ட வீட்டுமனைகள், விவசாய நிலங்களின் ஆவணங்கள், 10 வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகங்கள், ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்ட எல்.ஐ.சி. பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

இதனிடையே, வரதராஜின் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றபோது, வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அலங்கார பொருட்கள் மூலம் பல்வேறு அறைகளை அழகுப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். வரதராஜின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மாநகராட்சி ஆணையாளர் வரதராஜூக்கு சொந்தமான சேலம் பங்களா வீட்டில் 160 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story