நடிகர்களின் வேடம் அணிந்து வந்த நடன கலைஞர்கள் திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு மனு


நடிகர்களின் வேடம் அணிந்து வந்த நடன கலைஞர்கள் திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு மனு
x
தினத்தந்தி 23 Jan 2018 4:00 AM IST (Updated: 23 Jan 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நடத்திய குறைகேட்பு கூட்டத்துக்கு நடிகர்களின் வேடம் அணிந்து வந்த நடன கலைஞர்கள், கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தினர் எம்.ஜி.ஆர்., ரஜினி, டி.ராஜேந்தர் போன்று வேடம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஆபாச நடனம்

கடலூர் மாவட்டத்தில் நடன கலைஞர்கள் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். எங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சி நடத்த காவல்துறையால் அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆனால் நடனத்துறைக்கு சம்பந்தமில்லாத இடைத்தரகர்கள் சிலர், வெளிமாநில பெண்களை அழைத்து வந்து ஆபாச நிகழ்ச்சிகள் நடத்து கிறார்கள். இதனால் முறையாக நடன நிகழ்ச்சி நடத்தி வரும் எங்களின் பிழைப்பு பாதிக்கப்படுத்துவதால், ஆபாச நடன நிகழ்ச்சிகளை காவல்துறை உதவியுடன் எங்கள் சங்கம் தடுத்து வருகிறது.

எனவே எங்கள் சங்கத்தின் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் கோவில் திருவிழாக்களில் ஆபாச நிகழ்ச்சி நடத்த மாட்டோம், அரசியல் சாதி, மதம் சார்ந்த பாடல்களுக்கு நடனம் ஆட மாட்டோம். எனவே திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்த எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

நரிக்குறவர்களுக்கு கடன்

கலெக்டரிடம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் வி.எம்.சேகர் தலைமையில் லால்புரத்தைச்சேர்ந்த நரிக்குறவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

லால்புரத்தில் நரிக்குறவர் இனத்தைச்சேர்ந்த 30 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.ஊர், ஊராக சென்று ஊசி, பாசிமணி, பலூன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வருகிற நரிக்குறவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் அல்லது முத்ரா திட்டத்தில் தொழில் கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

இதுதவிர பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். வெங்கடாம்பேட்டையைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி வரதராஜூக்கு சிறப்பு சக்கரநாற்காலியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பஸ் கட்டண உயர்வின் காரணமாக வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். 

Next Story