விமானத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரம் 2 விமானிகளின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து


விமானத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரம் 2 விமானிகளின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து
x
தினத்தந்தி 25 Jan 2018 4:05 AM IST (Updated: 25 Jan 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக 2 விமானிகளின் உரிமத்தையும் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

மும்பை,

ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று கடந்த 1-ந்தேதி லண்டனில் இருந்து மும்பை நோக்கி வந்தது. இந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 324 பயணிகள் மற்றும் 14 சிப்பந்திகள் இருந்தனர். இந்தநிலையில் விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது, அதை இயக்கிச்சென்ற 2 விமானிகள் இடையே திடீரென சண்டை ஏற்பட்டது. இதில் ஆண் விமானி ஒருவர், சக பெண் விமானியை கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும் 2 பேரும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விமானி அறையை விட்டு வெளியே வந்துள்ளனர். இதனால் விமானம் சிப்பந்திகளின் உதவியால் இயக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நடுவானில் விமானத்தில் சண்டைபோட்ட 2 விமானிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய இணை இயக்குனர் லலித்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயணிகளின் பாதுகாப்பை பற்றி பொருட்படுத்தாமல் விமானி அறையை விட்டு வெளியே வந்த 2 விமானிகளின் உரிமங்களும் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் அந்த 2 விமானிகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த விமான நிறுவனத்திலும் பணியாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story