மணிமுத்தாறு அணையின் 4–வது ரீச்சில் 10–வது மடைக்கு தண்ணீர் திறக்கக்கோரி 1–ந் தேதி உண்ணாவிரத போராட்டம்
மணிமுத்தாறு அணையின் 4–வது ரீச்சில் 10–வது மடைக்கு தண்ணீர் திறக்கக்கோரி இட்டமொழியில் 1–ந் தேதி உண்ணாவிரத போராட்டம்
நெல்லை,
மணிமுத்தாறு அணையின் 4–வது ரீச்சில் 10–வது மடைக்கு தண்ணீர் திறக்கக்கோரி இட்டமொழியில் 1–ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.
விவசாயிகள் மனுவெள்ள உபரிநீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்க தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் சுதாகர் பாலாஜி, பொருளாளர் பூபதி பாண்டியன் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
கடந்த டிசம்பர் மாதம் 20–ந் தேதி மணிமுத்தாறு அணையில் உள்ள 1 முதல் 4–வது ரீச் வரை உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 35 நாட்கள் ஆகியும் 375 கனஅடி 1, 2 வது ரீச்சுக்கு கொடுத்து வருகிறது. 3, 4 வது ரீச்சுக்கு 75 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.
4–வது ரீச்சின் 10–வது மடையில் உள்ள குளங்களின் விவசாய பயிர்கள் அழிந்து போகும் நிலை உள்ளது. மேலும் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீர் பெருகாமல் குடிநீர் கிடைக்காத அவலநிலை உருவாகி உள்ளது. ஆனைகுடி பகுதியில் நிலத்தடியில் கடல்நீர் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பல முறை கவர்னர், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
உங்களுக்கு சீனியரிட்டி அடிப்படையில் தண்ணீர் கொடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். அதனை நம்பி ஒரு மாதமாக காத்து இருக்கிறோம். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
உண்ணாவிரதம்மணிமுத்தாறு அணையின் பாசனநீர் நான்காவது ரீச் 10–வது மடையின் கீழ் உள்ள 15 குளங்களுக்கு மறுக்கப்படுகின்றன. மேற்கண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க கோரியும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் வருகிற 1–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இட்டமொழி பஸ் நிலையம் முன்பு 15 குளங்களில் இருந்து விவசாயம் பெறும் விவசாயிகள், பொதுநலச்சங்கங்களை திரட்டி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.