‘காந்தியுடன் இருந்தவர்களில் வாழும் நபர் நான் மட்டுமே!’


‘காந்தியுடன் இருந்தவர்களில் வாழும் நபர் நான் மட்டுமே!’
x
தினத்தந்தி 30 Jan 2018 3:58 PM IST (Updated: 30 Jan 2018 3:58 PM IST)
t-max-icont-min-icon

இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் நினைவு நாள். காந்தியின் கடைசி காலத்தில், அவருடன் 4 வருடங்கள் தனிச் செயலாளராக பணிபுரிந்த வி.கல்யாணம் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பரபரப்பான கடைசி நிமிடங்களை விவரிக்கிறார்:-

வெள்ளைக்காரன் அலுவலகத்தில் வேலை

மகாத்மா காந்தி மறைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. உலகில் அவருடன் இருந்த நபர்களில் நான் மட்டுமே வாழ்ந்து வருகிறேன். எனக்கு 96 வயது ஆகிறது. நான் சிம்லாவில் பிறந்தேன். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெள்ளைக்காரன் அலுவலகத்தில் மாதம் 60 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

1942-ம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, காங்கிரஸ்காரர்கள் தவிர பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. எனது தகப்பனாரின் நண்பருக்கு காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியை தெரியும். ஒருநாள் அவரிடம், என் மகன் அலுவலக வேலையை விட கைத்தொழிலில் அதிக ஆர்வமுடையவனாக இருக்கிறான் என்று கூறி உள்ளார்.

அப்படியானால், அவரை ஆசிரமத்தில் சேர்க்கலாமே என்று தகப்பனாரின் நண்பர் தெரிவித்து இருக்கிறார். ஒருநாள் எனது தந்தையின் நண்பர் என்னை அழைத்துக் கொண்டு தேவதாஸ் காந்தியிடம் சென்றார். அவர்தான் காந்தியின் மகன் என்று அப்போது எனக்கு தெரியாது. அவர் என்னிடம், அலுவலக வேலை பிடிக்காவிட்டால், உனக்கு கைத்தொழில் பிடித்து இருந்தால் ஆசிரமத்தில் சேரலாமே என்று கூறினார். இது குறித்து நான் வேலை பார்க்கும் வெள்ளைக்கார அதிகாரியிடம் கூறினேன். அதற்கு அவர் விருப்பப்பட்டால் போய் சேர்ந்துவிடு என்று கூறினார்.

காந்திக்கு சிகிச்சை

இதைத் தொடர்ந்து தேவதாஸ் காந்தியிடம் கூறி, அவரிடம் இருந்து அறிமுக கடிதத்தை பெற்றுக்கொண்டு 1943-ம் ஆண்டு நாக்பூரில் உள்ள சேவா கிராம ஆசிரமத்திற்கு சென்று வேலையில் சேர்ந்து ஆசிரம வேலைகளை செய்து வந்தேன். நான் வேலையில் சேர்ந்தபோது காந்தி போராட்டத்தில் கைதாகி ஆகாகான் பேலசில் இருந்தார். 1944-ம் ஆண்டு காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காந்தி உயிரோடு இருந்த வரையில் வெள்ளைக்காரன்களை எதிர்த்து போராடினாலும், காந்தியை அவர்கள் நன்றாக பார்த்துக்கொண்டார்கள்.

பெரிய டாக்டர்களை வரவழைத்து அவருக்கு ‘அலோபதி’ மருந்துகளை கொடுத்தனர். அதை சாப்பிட மறுத்த காந்தி இயற்கை மூலிகை சிகிச்சை வைத்தியம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அந்த வைத்தியம் வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. காந்தி இறந்துவிட்டால், பெரிய பிரச்சினை ஆகிவிடும் என பயந்த அவர்கள் வெளியில் சிகிச்சை பெற வசதியாக காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்துவிட்டனர்.

காந்தியை பார்க்க ஆவல்

காந்தி மும்பை வந்து, ஜூகுவில் உள்ள கப்பல் அதிபர் சாந்திகுமார்மொரார்ஜி பங்களாவில் தங்கி இருந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து விடுதலையாகி இருப்பதால், ஆசிரமத்தில் இருந்தவர்கள் அவரை பார்க்க சென்றனர். எனக்கும் காந்தியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவர்களுடன் நானும் வருகிறேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன். அவர்கள் என்னை அழைத்து சென்றனர். பங்களாவில் கோட், சூட் அணிந்த ஒருவருடன் கோவணம் அணிந்த ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவர் வீட்டு வேலைக்காரனாக இருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அவர்தான் காந்தி என்று அப்போது எனக்கு தெரியாது.

அந்த நபருடன் பேசி முடித்த பின்னர் ஆசிரமத்தில் இருந்து தன்னை சந்திக்க வந்தவர்களை காந்தி அழைத்தார். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினர். அப்போது காந்தி என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிந்துகொண்டார். வெள்ளைக்காரனிடம் எவ்வளவு சம்பளம் வாங்கினாய்? என்று கேட்டார். நான் கடைசியாக 200 ரூபாய் வாங்கினேன் என்றேன். என்னால் அவ்வளவு தர முடியாது. 60 ரூபாய் தான் தர முடியும் என்றார். சாப்பாடும், தங்குமிடமும் கிடைத்தால் போதும். பணம் எனக்கு முக்கியமில்லை என்று கூறிவிட்டு ஆசிரமத்துக்கும் வந்துவிட்டேன். அதன்பின்னர் காந்தி அக்டோபர் மாதம் 1-ந்தேதி ஆசிரமத்துக்கு திரும்பினார்.

பிரார்த்தனைக்கு முக்கியத்துவம்

காந்தி தினந்தோறும் அதிகாலை 3 மணி அளவில் எழுவார். காந்தியின் அறையில் 3.30 மணிக்கு பிரார்த்தனை நடைபெறும். காந்தி பிரார்த்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இதில் ஆசிரமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். யாராவது வரவில்லை என்றால், அதை அவர் கண்டுபிடித்துவிடுவார். கோபப்படமாட்டார். மாறாக, பிரார்த்தனையில் விருப்பம் இல்லாவிட்டால், வீட்டில் இருந்துவிடுங்கள் என்று கூறிவிடுவார்.

பிரார்த்தனை முடிந்ததும் மார்பிள் கல்லால் உருவாக்கப்பட்ட டம்ளரில் வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து, அதில் தேன் கலந்து மெதுவாக குடிப்பார். அந்த சமயம் தான் அவருக்கு வந்த கடிதங்களுக்கு பதில் எழுதுவதற்காக என்னை அழைத்து குறிப்புகளை கொடுப்பார். 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் இந்த பணி நடைபெறும். 6 மணிக்கு மேல் ஆசிரமத்தில் நடைபயிற்சி செய்வார். மழைக் காலத்தில் அறையிலேயே இங்கும், அங்கும் நடந்து செல்வார்.

7.30 மணிக்கு ஒரு அறையில் படுத்துக்கொள்வார். அப்போது அங்கு இருப்பவர்கள் அவருக்கு கடுகு எண்ணெயில், எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து மசாஜ் செய்வார்கள். மசாஜ் செய்யும்போது அவருக்கு நல்ல தூக்கம் வந்துவிடும். அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிப்பார். உடலில் சோப் போட்டு துணியால் உடலை அழுத்தி துடைப்பார்.

காலை 9 மணிக்கு குஜராத் உணவு வகையான 2 காக்ரா (கோதுமையில் உருவான ரொட்டி) சாப்பிடுவார். அது தவிர உப்பு இல்லாமல் பரங்கியோ, பூசணியோ சாப்பிடுவார். ஏழைகளுக்கு கிடைக்கும் சாப்பாட்டை தான் அவர் சாப்பிடுவார். வாழ்நாள் முழுவதும் அதையே கடைபிடித்தார்.

குட்டி தூக்கம்

முதலில் காந்தி பசும்பால் குடித்துக்கொண்டு இருந்தார். ஒரு நண்பர் அவரிடம், ‘நீங்கள் பசும்பால் குடிக்கிறீர்கள். பால்காரன் அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மாட்டின் பின்புறம் கம்பால் குத்துகிறான். இதனால் பசு பாலை அதிகம் கறக்கிறது’ என்று கூறினார். மாட்டை சித்ரவதை செய்வதால், பசும்பாலை சாப்பிடுவதை விட்டுவிட்டார். ஆட்டை யாரும் சித்ரவதை செய்யாததால், ஆட்டுப்பாலை குடிக்க தொடங்கினார்.

பகல் நேரத்தில் அடிக்கடி குட்டி தூக்கம் போடுவார். மதியம் 1 மணிக்கு ஆரஞ்சு ஜூஸ் குடிப்பார். 30 நிமிடம் ராட்டையில் நூல் நூற்பார். 30 நிமிடம் படுக்கையில் படுத்துக்கொண்டு பேத்திகளை வயிற்றில் களி மண்ணை பிசைந்து மசாஜ் செய்ய சொல்வார். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகள் அழிந்துவிடும்.

மாலை 5 மணிக்கு பொது பிரார்த்தனை நடைபெறும். பிரார்த்தனை முடிந்தவுடன் காந்தி உரை நிகழ்த்துவார். அப்போது, நாட்டின் சுதந்திரம் தொடர்பான பேச்சு வார்த்தை, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கமாக கூறுவார். இரவு 9 மணிக்கு படுக்கைக்கு சென்றுவிடுவார்.

வெடிகுண்டு வீச்சு

நம் நாட்டில் 7 லட்சம் கிராமங்கள் உள்ளன. அங்கு உள்ளவர்களுக்கு வீட்டு வசதி இல்லை. ஆஸ்பத்திரி, போக்குவரத்து, கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை. அனைத்து கிராமங்களுக்கும் இவற்றை செய்துகொடுக்க வேண்டும். இதற்கு அதிக பணம் வேண்டும். வீண் செலவை குறைக்க வேண்டும். மது, லாட்டரி சீட்டு, குதிரை பந்தயம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என காந்தி வலியுறுத்தினார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் காந்தி சொன்னதை யாரும் கேட்கவில்லை.

1948-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி காந்தி டெல்லியில் பிர்லா ஹவுசில் தங்கி இருந்தார். அவர் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றபோது, மதன்லால் பாபு என்ற பஞ்சாபி அகதி காந்தியை கொல்வதற்காக தெருவில் இருந்து வெடிகுண்டை வீசினார். அது சுவரில் வெடித்து இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவம் பற்றி அறிந்த துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி படேல் அன்று இரவே காந்திக்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், அவரை சந்திக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும்படியும், போலீசாருக்கு உத்தரவிட்டார்.

‘என் உயிர் கடவுள் கையில்’

மறுநாள் காலை ஒரு போலீஸ்காரர், என்னிடம் வந்து படேலின் உத்தரவுப்படி பிரார்த்தனை கூட்டத்துக்கு வருபர்களின் பைகளை சோதனை போட வேண்டும் என்று கூறினார். நான் காந்தியிடம் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, அதை காந்தியிடம் தெரிவித்தேன். ஆனால், காந்தி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. யார் மீது சந்தேகம் இருக்கிறதோ, அவர்களை பிடிக்கட்டும். பைகளை சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்த தகவலை அந்த போலீஸ்காரரிடம் நான் தெரிவித்தேன். அவர் மேலதிகாரிகளிடம் சென்று கூறினார்.

அன்று மாலை போலீஸ் மேலதிகாரி காந்தியை சந்தித்தார். அவர் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீசாரின் கடமை. அப்படி கொடுக்காமல், ஏதாவது விபரீதம் நடந்தால் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். போலீசுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று கூறினார். அதற்கு காந்தி இதை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த போலீஸ் அதிகாரி பதில் சொன்ன பிறகு, காந்தி ‘நீங்கள் பத்தாயிரம் பேரை பாதுகாப்புக்கு போட்டால் கூட இந்த மாதிரி சம்பவத்தை தடுக்க முடியாது. என் உயிர் கடவுள் கையில் உள்ளது’ என்று கூறி சோதனைக்கு மறுத்துவிட்டார்.

கொலை திட்டம்

ஜனவரி 30-ந்தேதி நாதுராம் கோட்சே காந்தியை கொலை செய்யும் திட்டத்துடன் கைத்துப்பாக்கியோடு மாலை 5 மணிக்கு பிர்லா ஹவுசுக்கு வந்தான். எப்போதும் பிரார்த்தனை கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கும். காந்தி எப்போதும் நேரம் தவறாமல் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்துவிடுவார். ஆனால் அன்று மாலை 4 மணிக்கு சர்தார் வல்லபாய் படேலை தன்னை சந்திக்கும்படி கூறி இருந்தார். ஏனென்றால், அந்த நாட்களில் உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளில் நேருவுக்கும், படேலுக்கும் கருத்து வேறுபாடு என்று பரபரப்பான செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுபற்றி காந்தியின் கவனத்துக்கு வந்ததும், படேலை அழைத்து பேசிக்கொண்டு இருந்தார். 11 மணிக்கு தொடங்கிய பேச்சு மாலை 5 மணியை தாண்டிய பிறகும் நீடித்தது. 5 மணிக்கு இவர் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்ல வேண்டும். ஆலோசனை நீடித்தால் அவர் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்ல முடியாது. காந்தியின் மருமகள்கள் ஆபா காந்தி, மனு காந்தி ஆகியோர் காந்தியின் நிகழ்ச்சி நிரல் குறித்து அவரிடம் தெரியப்படுத்துவர்.

முக்கியமான ஆலோசனை என்பதால் அவர்களால் சொல்ல முடியவில்லை. அவர்கள் படேலின் மகள் மணி பென்னிடம் கூறி படேலை நினைவுபடுத்தும்படி கூறினார்கள். அதன்படி அவரும் நினைவுப்படுத்தினார். உடனே காந்தியும், படேலிடம் பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று கூறினார். படேலும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது மணி மாலை 5.15.

காந்தியை சுட்ட கோட்சே

காந்தி பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்ல புறப்பட்டார். பிர்லா ஹவுசில் உள்ள புல் தரையில் மனு காந்தி, ஆபா காந்தி ஆகியோர் தோள்களில் கைகளை போட்டபடி நடந்து வந்துகொண்டு இருந்தார். பிரார்த்தனை கூட்டத்தில் 300 பேர் கூடி இருந்தனர். அவர்களில் கோட்சேவும் இருந்தான். போலீஸ்காரர்கள் பைகளை சோதனை செய்யாததால், அவன் பையில் இருக்கும் ரிவால்வரை பார்க்க முடியவில்லை.

காந்தி பிரார்த்தனை மேடைக்கு சென்று அமர்வதற்கு முன், கோட்சே அவரது பாதத்தை வணங்க கிழே குனிந்தான். திடீரென அவன் ரிவால்வரை எடுத்து காந்தியை சுட்டான். இதில் காந்தியின் வலது புற வயிற்றில் 3 குண்டுகள் பாய்ந்தன. உடனே காந்தி பின்னால் சாய்ந்து விழுந்துவிட்டார். சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் ஐயோ... ஐயோ... என்று சத்தமிட்டபடி அலறி துடித்தனர்.

இறுதி அஞ்சலி

நான் காந்தியின் இடதுபுறம் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஒரே கூக்குரலாக இருந்ததால், காந்தி குண்டு பாய்ந்து கிழே விழும்போது எதுவும் சொன்னாரா? என்று கேட்கவில்லை. நான் உடனே வெளியில் சென்று அங்கு நின்ற காரில் படேல் வீட்டுக்கு சென்றேன். அவரிடம் செய்தியை சொன்னேன். பின்னர் பிரதமர் நேருவின் தனிச் செயலாளரிடமும் டெலிபோனில் செய்தியை சொன்னேன். அவர்கள் பிர்லா ஹவுசுக்கு விரைந்து வந்து, மகாத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

- காந்தியின் தனிச் செயலாளர் வி.கல்யாணம்

Next Story