சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் பிரசார குழு ஆலோசனை


சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் பிரசார குழு ஆலோசனை
x
தினத்தந்தி 1 Feb 2018 4:21 AM GMT (Updated: 1 Feb 2018 4:21 AM GMT)

பெங்களூருவில், சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு ஆலோசனை நடத்தியது. இதில், முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் சட்டசபை தேர்தலையொட்டி, மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் 70 பேர் கொண்ட குழுவை, அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி அமைத்துள்ளார். இதையடுத்து, அந்த பிரசார குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், பிரசார குழுவின் தலைவரான மந்திரி டி.கே.சிவக்குமார், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், நடிகை ரம்யா மற்றும் பிரசார குழுவில் இடம் பெற்றுள்ள பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஊதுகொம்பு வாசித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் முக்கிய தலைவர்கள் பிரசாரங்கள் எப்படி இருக்க வேண்டும், அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் முக்கிய தலைவர்கள் எந்த மாவட்டங்களில் பிரசாரம் செய்ய வேண்டும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர், நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது போன்றவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 10-ந் தேதி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசித்தனர்.

முன்னதாக ஆலோசனை கூட்டம் தொடங்கியதும் நடிகர், நடிகைகள் மேடைக்கு வரும்படி அழைக்கப்பட்டது. அப்போது நடிகையும், மந்திரியுமான உமாஸ்ரீ உள்ளிட்டோர் மேடைக்கு சென்றனர். ஆனால் நடிகை ரம்யா மட்டும் எழுந்து செல்லாமல் அமர்ந்திருந்தார். 2 முறை அவரது பெயரை சொல்லி அழைத்தும் நடிகை ரம்யா செல்லவில்லை. பின்னர் பிரசார குழுவின் தலைவர் டி.கே.சிவக்குமார் அழைத்த பின்னரே நடிகை ரம்யா எழுந்து மேடைக்கு சென்றார். ரம்யாவை 2 முறை அழைத்தும் அவர் செல்லாததால் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

Next Story