தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புகார்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் தெரிவிக்கலாம் ஆணையாளர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்று ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.வாட்ஸ்அ
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்று ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
வாட்ஸ்அப்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி தொடர்பான புகார்களை தெரிவிக்க 73977 31065 என்ற வாட்ஸ்அப் எண்ணை மாநகராட்சி அறிமுகப்படுத்தி செயல்பாட்டில் உள்ளது. இதில் பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி 600–க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று, சொத்துவரி நிர்ணயம், சொத்துவரி பெயர்மாற்றம், கட்டிட அனுமதி, தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அபராதம்
மேலும் அண்ணாநகர் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை சாலையில் பரப்பி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து இடையூறாக வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சி சார்ந்த புகார்களை மேற்படி வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.