பள்ளி தாளாளர் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது


பள்ளி தாளாளர் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 4:30 AM IST (Updated: 2 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் பள்ளி தாளாளர் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சினிமா துணை நடிகர் உள்பட பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆம்பூர்,


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). தனியார் மெட்ரிக்பள்ளி தாளாளராக உள்ளார். இவர், கடந்த 19–ந் தேதி காலையில் உடற்பயிற்சிக்கு செல்லும்போது நியுடவுன் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அவரை கடத்தி சென்றனர்.

இதனையடுத்து அவரது சகோதரரை தொடர்பு கொண்டு ரூ.3 கோடி கேட்டனர். பின்னர் ரூ.50 லட்சம் பேசி, அன்று மாலை கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அருகில் மர்ம நபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்து செந்தில்குமார் மீட்கப்பட்டார்.


அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் செந்தில்குமார் தெரிவித்த தகவல், மறைமுகமாக எடுக்கப்பட்டிருந்த வீடியோ காட்சிகள் மற்றும் செல்போனில் தொடர்பு குறித்த தகவல்களை சேகரித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த முத்து (27), கலீல் இப்ராஹிம் (32) ஆகிய 2 பேரை வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் சினிமா துணை நடிகர் ஹரி என்கிற ஹரிஹரன் என்பவருடன் ஏற்பட்ட நட்பால் இக்கடத்தல் சம்பவத்தில் இந்த 2 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களுடன் இருந்தவர்களை போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகி விட்டனர். இதனையடுத்து போலீசார் துணை நடிகர் ஹரி உள்பட தலைமறைவாக உள்ளவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்ப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story