இது அல்லவோ சாதனை!


இது அல்லவோ சாதனை!
x
தினத்தந்தி 2 Feb 2018 6:00 AM GMT (Updated: 2 Feb 2018 5:52 AM GMT)

நம்பவே முடியவில்லை அந்தச் சாதனையை... 9 மணி நேரத்தில் ஒரு ரெயில் நிலையத்தையே கட்டி அசத்தி இருக்கிறார்கள் சீனர்கள். மூக்குமேல் விரல் வைத்து வியப்பதுடன் நில்லாமல், முடிந்தால் விருதும் கூட வழங்கி கவுரவிக்கலாம் அந்த உழைப்பை.



சீனாவின் தென்கோடியில் இருக்கிறது புஜியான் மாகாணம். இங்குள்ள லாங்காய் நகரில் முக்கியமான மூன்று ரெயில் முனையங்கள் சந்திக்கும் வகையில் புதிய ரெயில் நிலையம் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது. கடந்த 19-ம் தேதி இரவுதான் பணியைத் தொடங்கினார்கள். மொத்தம் 1500 பணியாளர்கள். சரியாக திட்டம் தீட்டிக் கொண்டார்கள். மளமளவென தங்கள் பகுதி பணிகளை நிறைவேற்றினார்கள். 20-ம் தேதி விடிந்தபோது புதிய ரெயில் நிலையமே தயார். 9 மணி நேரத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியதுடன், அந்த ரெயில் நிலையம் வழியே ரெயிலையும் சோதனை முறையில் இயக்கிவிட்டார்கள். தண்டவாளம், சிக்னல், நடைமேடை, அலுவலக கட்டிடம் என அனைத்தும் சில மணி நேரங்களில் அமைக்கப்பட்டுவிட்டன.

நினைக்கவே மலைக்க வைக்கிறதல்லவா? இந்தச் சாதனை. அண்டை நாடான சீனாவை அரசியல் வெளியிலும், எல்லைப் பிரச்சினையிலும் ஏற்பட்ட அனுபவங்களால் கொஞ்சம் மட்டம்தட்டியே பேசிப் பழகிவிட்டோம் நாம். ஆனால் அவர்கள் பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்களில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்.

போட்டியாக நினைத்தாலும், எதிரியாக நினைத்தாலும் நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளன. அரசியலுக்கான அடுத்தகட்ட காய் நகர்த்தலுக்காகத்தான் இங்கே அடிப்படை வசதிகளுக்கான பணியே துரிதமாக நடைபெறுகிறது. அதுவரை நிதிப் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை என்று காரணம் காட்டும் அரசியல்வாதிகள், தேர்தல் தேதி அறிவித்தால், சீனர்களின் சாதனையை விஞ்சும் அளவுக்கு முழு மூச்சில் செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள், அதுதான் எப்படியோ?தாரம்பரத்தில் மூன்றாவது ரெயில் முனையம், ‘அடுத்த மாதத்தில் திறக்கப்படும்’ என்ற செய்தியை பல முறை பத்திரிகையில் படித்துவிட்டோம். ஆனால் மாதங்கள்தான் கடந்து போகின்றன. திறப்புவிழா எப்போதோ? தெரியவில்லை. அவசியம் கருதி திட்டம் தீட்டுபவர்கள், அதை அவசரம் கருதி முடிக்காமல் ஆமை வேகம் காட்டுவது ஏனோ?

மக்கள் தொகையில் விரைவில் சீனாவை மிஞ்சிவிடுவோம் என்கிறது ஒரு கணிப்பு. இதுபோன்ற சாதனையிலும் சீனாவை விஞ்சி நின்றால்தானே சிறப்பு!

- விழி

Next Story