இலவசங்களால் கடனில் தத்தளிக்கும் தமிழகம்...!


இலவசங்களால் கடனில் தத்தளிக்கும் தமிழகம்...!
x
தினத்தந்தி 2 Feb 2018 12:01 PM IST (Updated: 2 Feb 2018 1:11 PM IST)
t-max-icont-min-icon

வீடு... நாடு... இவை இரண்டுக்கும் எப்போதுமே பல ஒற்றுமைகள் உண்டு. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், அதை நிர்வகிக்கும் குடும்பத்தலைவரின் மாத வருமானத்திற்குள், அம்மாத செலவு கட்டுக்குள் இருந்து கொண்டால், அந்த குடும்பம் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால், ஆண்டு வரி வருவாய்க்குள், அந்த ஆண்டு நிறைவேற்றப்படும் திட்டங்கள் உள்ளிட்ட செலவினம் அடங்கிக் கொண்டால், அந்த நாடும் வளர்ச்சியின் பாதையில் வீறுநடைபோடுகிறது என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நிலைமை தலைகீழாக அமைந்தால், வீடும்... நாடும்... வீழ்ச்சியின் பாதையில் சறுக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் முடிவு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் தற்போது தமிழ்நாடு பயணித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2017-2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், நாட்டின் கடன் சுமை, இந்த நிதியாண்டு (மார்ச்) இறுதிக்குள் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, கடந்த ஓராண்டில் மட்டும் கடன் அளவு ரூ.1 லட்சம் கோடியாக எட்டியிருந்தது. ஒரு மாநிலம் கடன் வாங்கிக்கொள்வதற்கு, அம்மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் அளவுக்கு தான் அனுமதிக்கப்படுகிறது. அதைவைத்து பார்க்கும் போது, தமிழகத்தின் கடன் அளவு, மொத்த உற்பத்தி மதிப்பில் 20.90 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது என்றாலும், கடன் வாங்குவதில் இதே வேகம் தொடர்ந்தால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கடன் வாங்க முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். அதன் பிறகு, மக்களை பாதிக்கும் முடிவுகளை அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வகையிலான பாதிப்பு தான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு. முதல் அடியே இப்படி என்றால், இனி என்ன நடக்குமோ என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

தமிழ்நாடு வீழ்ச்சி பாதையில் செல்லும் நிலைக்கு யார் காரணம்?, எதனால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது? என்பதை இந்த நேரத்தில் மக்களாகிய நாம் அனைவரும் அவசியம் ஆராய வேண்டும். ஏனென்றால், 1984-1985-ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சுமை 2 ஆயிரத்து 129 கோடியே 59 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு, பல்கிப்பெருகி 2015-2016-ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 95 கோடி என்ற அளவுக்கு கடன் சுமை உயர்ந்தது. இப்போதோ, அனைவரும் மலைக்கும் அளவுக்கு ரூ.3 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த காலக்கட்டங்களில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் மாறி.. மாறி.. இருந்திருக்கின்றன. 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இவர்களால், நீர் ஆதாரத்தை பெருக்க, பெயர் சொல்லும்படி எந்தவொரு அணையும் கட்டப்படவில்லை. இருந்தாலும், பல்வேறு திட்டங்களை சொல்லி அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. அவற்றை உற்று நோக்கினால், பெரும்பாலும் இலவச திட்டங்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் (2017-2018) மட்டும் பல்வேறு திட்டங்களுக்கு மானியமாக ரூ.72 ஆயிரத்து 616 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச திட்டங்கள் என்பது ஒரு நாட்டிற்கு தேவை தான். ஆனால், அதற்கு ஏற்ற வகையில் நிதி ஆதாரமும் வலுவாக இருக்க வேண்டும். உபரி நிதி இருந்தால், அதன் மூலம் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கலாம். ஆனால், கடன் வாங்கி இலவசங்களை வழங்க வேண்டிய நிலை தமிழக ஆட்சியாளர்களுக்கு ஏன் ஏற்பட்டது?. இலவச அறிவிப்புகள் எப்போதுமே தேர்தல் நேரத்தில் தான் வந்திருக்கின்றன. தேர்தலை சந்திக்கும் முன்பாக, கட்சி சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசங்களை வழங்குவோம் என்ற பட்டியல் இடம்பெறுகிறது. அப்படித்தான், தி.மு.க. ஆட்சியில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியும், அ.தி.மு.க. ஆட்சியில் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி என்று இலவசங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் முதன்முதலில், ஏழைகளும் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற அடிப்படையில், பள்ளிகளில் மதிய உணவு காமராஜர் ஆட்சி காலத்தில் இலவசமாக வழங்கப்பட்டது. அப்போதைய நிலையில் அது தேவையான திட்டம் ஆகும். ஆனால், இப்போது வழங்கப்படும் இலவசங்கள் கவர்ச்சித் திட்டமாக, தேர்தல் வெற்றியை குறிவைத்தே அறிவிக்கப்படுகிறது. நிதி நிலைமையை பற்றி கவலைப்படுவது இல்லை. தேர்தல் வெற்றியை பற்றியே முழு எண்ண ஓட்டமும் இருக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று, வாக்குறுதி அளித்த இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை வரும்போது தான் நிதி ஆதாரம் கண்முன் வந்து நிற்கிறது. விளைவு, எங்கும் கடன்... எதற்கும் கடன்... என்ற நிலை ஏற்படுகிறது.

நாம் நமது வீட்டிற்காக கடன் வாங்கியிருந்தால், அந்த கடனுக்கான முழு பொறுப்பும் நம்மைச் சேர்ந்தது. ஆனால், நாட்டுக்கே இந்த நிலை வரும்போது, ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதில்லை. காரணம், அவர்கள் வாங்கிய கடனை, அவர்கள் ஆட்சி காலத்திலேயே அடைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. அதனால் தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல், கடனை வாங்கிக் குவிக்கிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், நாட்டின் நிலைமையைப்போல் மக்களின் நிலைமையும் மோசமாகும். இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும். எதிர்வரும் காலங்களில், தேர்தல் நேரங்களில் கவர்ச்சிகரமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டால், அதை வேண்டாம் என்று அப்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான திட்டங்களை தைரியமாக சொல்லி, கடனை அடைப்போம் என்று சொல்பவர்களுக்கே ஆதரவு கரம் நீட்டுவோம் என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

எனவே, தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியும், ஆண்ட கட்சியும், இனி மக்களை சந்திக்க வரும்போது, பகட்டு அறிவிப்புகளை வெளியிட வேண்டாம். உங்களது மனநிலையில் மாற்றம் வரவில்லை என்றால், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

-ஆர்.கே. சென்னை.


Next Story