காரில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது


காரில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2018 4:15 AM IST (Updated: 10 Feb 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 25 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ஜெகந்தரா கோவிந்தன் (வயது 22) என்றும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் தமிழ்நாட்டில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த கஞ்சாவை கொண்டு செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story