போலீசார் தாக்கியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயம்; பொது மக்கள் மறியல்
அருமனையில் வாகன சோதனையின் போது, போலீசார் தாக்கியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
அருமனை,
அருமனை மேலத்தெரு பகுதியில் நேற்று மாலை அருமனை போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது சூரகாட்டுவிளையை சேர்ந்த தொழிலாளி ராஜேஷ் (வயது 29) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் வேகமாக வந்ததாகவும், அந்த வாகனத்தை தடுக்க முயன்ற போது, அவர் கையை பிடித்து போலீசார் இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ராஜேஷ் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவர் தலையில் படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை அருமனை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே மேலத்தெரு, சூரகாட்டுவிளை, நெடுங்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டனர். அவர்கள், ராஜேஷை போலீசார் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையில் அதிரடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவே நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அதை ஏற்க பொது மக்கள் மறுத்து மறியலை தொடர்ந்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.
அந்த சமயம் கல்வீச்சு நடந்தது. இந்த கல்வீச்சில் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கிது. அதன்பிறகும் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது.