கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது


கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 11 Feb 2018 3:45 AM IST (Updated: 11 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் உல்லாசமாக இருந்ததை கண்டித்ததால் கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டையை சேர்ந்தவர் விக்டர் (வயது 36). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அபய ஐஸ்வர்யா (27). கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அருண் சஞ்சய் (8) என்ற மகன் உள்ளான். இவர்கள் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள தில்லை நகரில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விக்டர் வேலை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அபய ஐஸ்வர்யா ஓசூரில் உள்ள ஒரு தனியார் டிரைவிங் பள்ளியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் டிரைவிங் பள்ளிக்கு பயிற்சிக்கு சென்றபோது அபய ஐஸ்வர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கள்ளக்காதல்

இதுகுறித்து விக்டருக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறும் கூறியுள்ளார். ஆனால் அபய ஐஸ்வர்யாவால், குணசேகரனுடனான கள்ளக்காதலை விடமுடியவில்லை. இருவரும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அபய ஐஸ்வர்யாவும், குணசேகரனும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த விக்டர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது மனைவியை கண்டித்தார். குணசேகரனையும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், விக்டரை தாக்கி கீழே தள்ளினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கீழே கிடந்த கயிற்றால் விக்டரின் கழுத்தை இருவரும் இறுக்கினர். இதில் விக்டர் மயங்கி விழுந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அபய ஐஸ்வர்யா, விக்டரை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மனைவி, கள்ளக்காதலன் கைது

உடனே டாக்டர்கள் என்ன நடந்தது என அபய ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அபய ஐஸ்வர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அபய ஐஸ்வர்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது கணவரை, கள்ளக்காதலன் குணசேகரனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அபய ஐஸ்வர்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் குணசேகரனை போலீசார் கைது செய்தனர். காதல் திருமணம் செய்த மனைவியே கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story