கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை


கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை
x
தினத்தந்தி 12 Feb 2018 5:40 AM IST (Updated: 12 Feb 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பெண் விவசாயி ஒருவர் எழுந்து, “கர்நாடகத்தில் எங்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி தேவை இல்லை. கடனை செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்“ என்றார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிபிரசாத், மதுவிலக்கு வேண்டும் என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைகளை உயர்த்தினர். அப்போது சித்தராமையா குறுக்கிட்டு பேசியதாவது:-

மது குடிப்பவர்கள் எல்லாம் இப்படி கையை உயர்த்திவிட்டால் எப்படி. கர்நாடகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியம் இல்லை. தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முன்பு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டது. மதுவிலக்கு வேண்டும் என்று கூறிய பெண் விவசாயியின் கோரிக்கை நியாயமானது. கர்நாடகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், நமது மாநிலத்தை சுற்றியுள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மது விற்பனை செய்யப்படும். இங்கு இருப்பவர்கள் அங்கு சென்று குடிப்பார்கள்.

அங்கு விற்கப்படும் மதுபானங்கள் சட்டவிரோதமாக கர்நாடகத்திற்குள் கொண்டு வரப்படும். இதனால் பல்வேறு விதமான சட்டவிரோத செயல்கள் நடைபெற வழிவகுக்கும். மேலும் மக்கள் கஞ்சா உள்ளிட்ட மிக மோசமான போதை பழக்கத்திற்கு மாறிவிடுவார்கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த ஒரு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். அவ்வாறு நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை விதித்தால் அதை கர்நாடகம் ஏற்றுக்கொள்ளும். இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story