அமராவதி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்


அமராவதி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் சாமானிய மக்கள் நலக்கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், மனித நேய ஜனநாயக கட்சி, மே 17 இயக்கம் உள்பட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் ஆண்டாங் கோவில் அமராவதி ஆற்றில் வட்டக்கிணறுகள் அமைத்து டீசல் மற்றும் மின் மோட்டார் மூலமாக தண்ணீர் வரைமுறை இல்லாமல் உறிஞ்சப்பட்டு டேங்கர் லாரிகளில் கடத்தப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாவிட்டால் ஓரிரு மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தண்ணீர் இல்லாமல் காலிக் குடங்களுடன் மக்கள் அலைய வேண்டியிருக்கும். எனவே தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்.

அமராவதி ஆற்றின் இரு புற கரையிலும் சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து தண்ணீரை திருடி கருப்பம்பாளையம், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், ராயனூர், ஆண்டாங்கோவில் பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறை நிறுவனத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாயப்பட்டறை கழிவுகளை அமராவதி ஆற்றிலும், வாய்க்கால்களிலும் திறந்து விடுகின்றனர். இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் இந்து மக்கள் கட்சியினர் கொடுத்த மனுவில், “சுக்காலியூர் சாலைபுதூர் பகுதியில் சிதிலமடைந்த விநாயகர் கோவிலை புதியதாக கட்ட அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “தாந்தோன்றிமலை பகுதியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்துக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் விற்பனை செய்யும் கேபிள் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு கொடுத்த மனுவில், “கரூரில் இருந்து கொக்கம்பட்டி வரை செல்லும் அரசு பஸ்சை தினமும் காலை 8.45 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புலியூரில் இருந்து பி.வெள்ளாளப்பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதை சீரமைக்க வேண்டும். கரூர் பஸ் நிலையம் அருகே செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு காலணி பழுது பார்க்கும் கூடம் மற்றும் கடன் உதவி வழங்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

குளித்தலை இனுங்கூர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “இனுங்கூர் அரசு விதை பண்ணையில் நெல் நடவு பணி செய்த 15 பேருக்கு சம்பள பாக்கி தரவில்லை. மேலும் 2016-2017-ம் ஆண்டு விதை சுத்திகரிப்பு செய்ததற்கான சம்பள பாக்கியும் கொடுக்கவில்லை. மொத்தம் ரூ.35 ஆயிரத்து 500 பாக்கி தொகையை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த நடைமுறைப்படி வேலை செய்யவும், சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன. அதனை கலெக்டர் கோவிந்தராஜ் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story