முன்விரோதத்தில் பயங்கரம்: பெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை 4 வாலிபர்கள் கைது


முன்விரோதத்தில் பயங்கரம்: பெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 15 Feb 2018 3:45 AM IST (Updated: 15 Feb 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக பெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அருந்திய போது பன்னீர்செல்வத்துக்கும், துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த வினோத் (23), கபிலன் (22) உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வினோத், கபிலன் ஆகியோர் சேர்ந்து பன்னீர்செல்வத்தை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருநகர் ஆலம்பாடி ரோடு அங்காளம்மன் கோவில் அருகே தெப்பக்குளம் மின்மோட்டார் அறையின் படிக்கட்டில் அமர்ந்து பன்னீர்செல்வம் தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

இதனையறிந்த வினோத், கபிலன், அவரது நண்பர் கும்பகோணம் மேலதெருவை சேர்ந்த விக்னேஷ் (23) மற்றும் துறைமங்கலத்தை சேர்ந்த நகுலேஷ்வரன் (23) ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் கைக்குட்டையால் தங்களது முகத்தை மூடிக்கொண்டு பன்னீர்செல்வத்தை பிடித்து கழுத்தை அரிவாளால் அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதற்கிடையே அவருடன் சேர்ந்து மது அருந்திய நண்பர் பயந்துபோய் ஓடிவிட்டார்.

கொலை சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே வினோத், கபிலன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அபினவ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். சம்பவ இடத்தில் இருந்து மதுபாட்டில்கள், செல்போன் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் பன்னீர்செல்வம் பிரபல ரவுடியாக இருந்ததால், முன்பு நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் சரணடைந்த கபிலன், வினோத், விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நகுலேஷ்வரனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story