நாகர்கோவிலில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதல்; மாணவன் சாவு


நாகர்கோவிலில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதல்; மாணவன் சாவு
x
தினத்தந்தி 17 Feb 2018 10:45 PM GMT (Updated: 17 Feb 2018 5:22 PM GMT)

நாகர்கோவிலில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக இறந்தான்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் இடலாக்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் முகமது மைதீன் மீராஷா. இவருடைய மகன் சரீப் அக்தர் (வயது 17). 10–ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், டுட்டோரியலில் சேர்ந்து படித்து வந்தான். இளங்கடை ரகுமத் நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் ஷாஜின் (16). நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். சரீப் அக்தரும், ஷாஜினும் நண்பர்கள்.

2 பேரும் நேற்று காலை 6.15 மணி அளவில் ஸ்கூட்டரில் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சரீப் அக்தர் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஷாஜின் அமர்ந்து சென்றார். அவர்கள் கோட்டார்– பறக்கை சாலையில் வெள்ளாடிச்சிவிளையில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே வந்த போது, எதிரே வந்த டெம்போ திடீரென ஸ்கூட்டர் மீது மோதிய வேகத்தில் ஒருபுறமாக சாய்ந்தது.


இதில் சரீப் அக்தர் ஸ்கூட்டருடன், சரிந்த டெம்போவின் அடிப்பகுதியில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஷாஜின் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டெம்போவின் அடிப்பகுதியில் சிக்கிய சரீப் அக்தரை மீட்டனர். அப்போது மார்பு, முகம் போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினான்.

உடனே அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரீப் அக்தரை பரிசோதித்த டாக்டர்கள் சரீப் அக்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கால் மற்றும் தலையில் காயம் அடைந்திருந்த ஷாஜின் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சசிதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரான வெள்ளமடத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (31) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விபத்தில் மாணவன் சரீப் அக்தர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story