அருங்காட்சியகத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? அரிய வகை கற்களை பாதுகாக்க கோரிக்கை


அருங்காட்சியகத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? அரிய வகை கற்களை பாதுகாக்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2018 10:45 PM GMT (Updated: 17 Feb 2018 7:31 PM GMT)

கரூர் அரசு கலைக் கல்லூரிஅருங்காட்சியகத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், அரிய வகை கற்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இதில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் புவி அமைப்பியல் பாடப்பிரிவு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பாடப்பிரிவுக்காக ஒரு அருங்காட்சியகம் கல்லூரியின் புவி அமைப்பியல் பாடப்பிரிவு வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் குறித்து அத்துறை தலைவர் கரிகாலன் கூறியதாவது:-

புவி அமைப்பியல் பாடப்பிரிவில் புவி அமைப்பு மற்றும் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் பற்றி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பெரும்பாலும் வகுப்பறையை விட்டு வெளியில் களத்தில் தான் மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெறும். அரியலூரில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்ததற்கான படிவங்களும், கடல் வாழ் உயிரினங்களின் படிமங் களும் கிடைத்துள்ளது. படிமங்களின்துகள்களை கொண்டு ஆண்டுகள் கணக்கிடப்படும்.

தோகைமலை, திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் மலைப்பகுதிகளில் இருந்தும் அரிய வகை பாறை கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அருங்காட்சியகத்தில் 200-க்கும் மேற்பட்ட பாறை வகை கற்களும், 120-க்கும் மேற்பட்ட தாவரங்கள், உயிரினங்களின் படிவங்களும் உள்ளது. இதனை வைத்து மாணவ- மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட கல்லூரி மாணவ- மாணவிகள் தவிர பள்ளி மாணவ- மாணவிகளும் வருகை தருவது உண்டு.

இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் பாறை வகைகளின் அரிய கற்கள், உயிரினங்களின் படிமங்கள் தரையிலும், மேஜையிலும் வைக்கப்பட்டுள்ளது. அதன் குறிப்புகள் குறித்து ஒரு சில வகைகளில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலானவை பற்றி குறிப்புகள் எதுவும் இல்லை. இதனால் அவற்றின் முழு வரலாற்றை எளிதில் மாணவ- மாணவிகள் அறிய முடியவில்லை. அருங்காட்சியகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அரிய வகை கற்கள் மற்றும் படிமங்களை தரையில் வைக்க வேண்டிய நிலை உள்ளது. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பான முறையில் வைக்கவும், ரேக்குகள் அமைத்து வரிசையாக அடுக்கி வைக்கவும் நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அருங்காட்சியக பொருட்களை கையாள உபகரணங்களும் இல்லை. ஒரு சிறிய வகுப்பறையில் அனைத்து பொருட்களையும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாணவ- மாணவிகள் பார்வையிட முடியவில்லை. அருங்காட்சியகத்திற்கு தனியாக ஒரு கட்டிடமும், அதற்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

மாணவ- மாணவிகள் களத்தில் தேடிச் சென்று அரிய வகைகளை கண்டு பிடித்து கொண்டு வந்ததை பாதுகாக்கப்பட வேண்டியதும் ஒரு கடமையாகும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கரூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள புவி அமைப்பியல் அருங்காட்சியகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னார்வலர்களும் அருங்காட்சியகத்திற்கு உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story